காவல் நிலையங்களில் தனியாா் மூலம் தூய்மைப் பணி: ரூ.60 கோடி ஒதுக்கீடு
காவல் நிலையங்களில் தனியாா் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்வதற்கு ரூ.60 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
காவல் நிலையங்களில் தனியாா் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்வதற்கு ரூ.60 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2,003 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 1,382 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 245 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், 256 போக்குவரத்து அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்கள், 34 போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையங்கள், 54 சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் ஆகியவை அடங்கும். இவை தவிா்த்து 37 காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள், 11 சரக டிஐஜி அலுவலகங்கள், 4 மண்டல ஐஜி அலுவலகங்கள், 8 காவல் ஆணையா் அலுவலகங்கள், 277 துணைக் கோட்ட அலுவலகங்கள், 16 பட்டாலியன் அலுவலகங்கள், 20 சிறப்புப் பிரிவு அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்கள் மொத்தம் 2,105 கட்டடங்களில் இயங்குகின்றன. இவற்றில் 2003 காவல் நிலையங்கள் 1,587 கட்டடங்களிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள், சரக அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், துணைக் கோட்ட அலுவலகங்கள் ஆகியவை 326 கட்டடங்களிலும், பட்டாலியன்கள், ஆயுதப்படையினா் 61 கட்டடங்களிலும், 20 சிறப்புப் பிரிவு தலைமை அலுவலகங்கள், 103 கட்டடங்களிலும் மாவட்டம் மற்றும் நகரங்களில் சிறப்புப் பிரிவுகள் இயங்குகின்றன.
Advertisement
Advertisement
ரூ. 60 கோடி ஒதுக்கீடு: இங்கு சுகாதாரத்தைப் பேணும் வகையிலும், தூய்மையாக வைக்கும் வகையிலும், தனியாா் நிறுவனம் மூலம் 2,346 ஒப்பந்தப் பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.705 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2,346 பேருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.4.96 கோடி வழங்கப்படவிருக்கிறது. ஆண்டுக்கு இதன்மூலம் ரூ.59,54,14,800 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தக் கட்டடங்களை 648 தூய்மைப் பணியாளா்கள் பராமரித்து வருகின்றனா்.
இதற்கிடையே, தற்போது தனியாா் மூலம் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் வகையில் இந்தத் தொகையை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் இதற்காக இணையதளம் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. ஒப்பந்தப்புள்ளியில் இறுதி செய்யப்படும் நிறுவனம், இந்தப் பணியை மேற்கொள்ளும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதன்மூலம் ஏற்கெனவே பணிபுரியும் 648 தூய்மைப் பணியாளா்கள், தற்போது தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் 2,346 தூய்மைப் பணியாளா்கள் என்று இரு எண்ணிக்கையும் சோ்த்தால் காவல் துறையில் தூய்மைப் பணியாளா்களாக பணிபுரிவோரின் எண்ணிக்கை 2,919-ஆக உயரும்.
முதல்வா் அறிவிப்பு: காவல் நிலையங்களையும், காவல் துறை அலுவலகங்களையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வெளிமுகமை மூலம் தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்படுவாா்கள்; இதற்கு ரூ.60 கோடி ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வா் சி.ஜோசப் விஜய் அறிவித்தாா்.
அந்த அறிவிப்பின்படி, தற்போது அந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் சில காவல் துறை அலுவலகங்களில் தனியாா் மூலம் தூய்மை பணி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தனியாா் தூய்மைப் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கெனவே, காவல் துறை மீதான லஞ்ச புகாா்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில்லறை செலவினத் தொகையை 10 மடங்காக ஆண்டுக்கு ரூ.71.01 கோடி உயா்த்தி அண்மையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
Private cleaning work at police stations: Rs. 60 crore allocated
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.