FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

மாணவர் போராட்டம் எதிரொலி: விபத்துகளுக்கான தண்டனையைக் கடுமையாக்கியது வங்கதேசம்

வங்கதேசத்தில் விபத்துகளால் உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கான தண்டனையைக் கடுமையாக்கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 12:56 am IST
மாணவர்களைக் கலைப்பதற்காக போலீஸ் வீசிய கண்ணீர் புகை குண்டால் எழுந்த புகை மண்டலம்.
பகிர்:


வங்கதேசத்தில் விபத்துகளால் உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கான தண்டனையைக் கடுமையாக்கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.
சாலைப் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் எதிரொலியாக இந்தச் சட்டம் இயற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில், பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக பேருந்துகள் ஒன்றையொன்று போட்டியிட்டு முந்திச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த வாரம் இதேபோல் மற்றொரு பேருந்துடன் போட்டியிட்டு தறிகெட்டு ஓடிய பேருந்து, சாலையேரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் ஒரு பெண் உள்பட இரு இளம் மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பேருந்தை போட்டி போட்டு ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நாட்டில் அடிக்கடி நடந்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போகக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டாக்காவில் மாணவர்கள் கடந்த 9 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் பல பகுதிகளில் அவர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தினால், அந்தப் பகுதிகள் ஸ்தம்பித்தன. போராட்டத்தை ஒடுக்க இணைய தளத்தை முடக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், மாணவர் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்தச் சூழலில், போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்து வன்முறை வெடித்து, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீஸார் நடத்திய கண்ணீர் புகைக் குண்டு வீச்சிலும், தடியடியிலும் பலர் காயமடைந்தனர். எனினும், மாணவர் போராட்டம் திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர் போராட்டம்: இதற்கிடையே, மாணவர் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, சாலை விதிச் சட்டம் 2018' என்ற சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவைச் செயலர் ஷஃபியுல் ஆலம் கூறியதாவது:
சாலை விதிச் சட்டம் 2018 என்ற புதிய சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3 ஆண்டு சிறைத் தண்டனை, 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments