நவாஸின் ஊழல் பணம் ரூ.33,000 கோடி இந்தியாவில் முதலீடா?: உலக வங்கி மறுப்பு
ஊழல் மூலம் சம்பாதித்த சுமார் ரூ.33,000 கோடியை (4.9 பில்லியன் டாலர்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தியாவில் முதலீடு செய்துள்ளார் என்று உலக வங்கி அறிக்கையில்
ஊழல் மூலம் சம்பாதித்த சுமார் ரூ.33,000 கோடியை (4.9 பில்லியன் டாலர்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தியாவில் முதலீடு செய்துள்ளார் என்று உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு உலக வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நவாஸ், ஊழல் செய்து ஈட்டிய பணத்தை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது தவறான செய்தியாகும். இதுபோன்ற எந்த ஒரு அறிக்கையையும் உலக வங்கி வெளியிடவில்லை. உலக வங்கியின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. உலக வங்கி அறிக்கை வெளியிடுவது உண்மைதான். அதில் கருப்புப் பணம் குறித்தோ, எந்த ஒரு தனிநபர் குறித்தோ எதையும் குறிப்பிடுவதில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் ஊடகங்களில் இது தொடர்பாக பரபரப்பாக செய்திகள் வெளியாயின. அந்தச் செய்திகளில், 'உலக வங்கியின் கடந்த 2016ஆம் ஆண்டு குடிபெயர்வு மற்றும் பணம் அனுப்புதல் தொடர்பான பதிவேட்டில், நவாஸ் ஷெரீஃப் குறித்த தகவல் உள்ளது. அதில் சட்டவிரோதமாக ஈட்டிய நிதி சுமார் ரூ.32,937 கோடியை இந்திய நிதியமைச்சகத்தில் நவாஸ் முதலீடு செய்துள்ளார். இதனால், இந்தியாவின் வெளிநாட்டு நிதி இருப்பு அதிகரித்து விட்டது. இதன்மூலம், பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 3 ஊழல் வழக்குகளை நவாஸ் ஷெரீஃப் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவை தொடர்புபடுத்தி மேலும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையமாக கருதப்படும் தேசிய கணக்கு ஆய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் பதவி வகித்தபோது, அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை தகுதிநீக்கம் செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.