FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

யேமனில் முழு போர் நிறுத்தம்!: முக்கிய கிளர்ச்சித் தலைவர் அழைப்பு

யேமனில் முழுமையான சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஹுதி கிளர்ச்சிப் படையின் முக்கியத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

யேமனில் முழுமையான சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஹுதி கிளர்ச்சிப் படையின் முக்கியத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் அந்த நாட்டில், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஐ.நா. ஆயத்தமாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் ஹூதி கிளர்ச்சிப் படையின் உயர் நிலைக் குழுத் தலைவரும், அரசியல் செல்வாக்கு மிக்கவருமான முகமது அலி அல்-ஹூதி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சவூதி அரேபியா மீது நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்களை யேமன் கிளர்ச்சிப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும், அரசு ஆதரவுப் படையினருக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் ஹுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்துவதுடன், போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் தயாராக வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தி வரும் தாக்குதல்களை, ஹூதி கிளர்ச்சிப் படையின் தலைவர்கள் முடிவுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இதன் மூலம், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை தொடர்ந்து முற்றுகையிடுவதை எதிரிகள் நியாயப்படுத்த முடியாத நிலை உருவாகும்.
நாட்டில் கெளரவமான அமைதியை ஏற்படுத்தும் வகையில், கிளர்ச்சியாளர்கள் அனைவரும் சண்டையைக் கைவிட வேண்டும்.
யேமனில் அமைதியைத் திரும்பச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஐ.நா. எடுத்து வரும் முன்முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தனது பதிவில் முகமது அலி அல்-ஹூதி தெரிவித்துள்ளார்.
ஹுதி கிளர்ச்சிப் படையின் சக்தி வாய்ந்த உயர் நிலைக் குழுவின் தலைவராக முகமது அலி அல்-ஹூதி பொறுப்பு வகித்தாலும், அந்த அமைப்பின் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம், படைத் தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹூதியிடமே உள்ளது.
எனினும், யேமன் கிளர்ச்சியாளர்களிடையே முகமது அலி அல்-ஹூதி செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
யேமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்து வந்த அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, சலே பதவி விலகினாலும், அவருக்குப் பிறகு அதிபர் பொறுப்பேற்ற மன்சூர் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.
இதன் காரணமாக, அல்-காய்தா பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்ததுடன், அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கை மேலோங்கியது.
யேமனின் தெற்குப் பகுதியில் சன்னி பிரிவினர் பெரும்பான்மை வகித்தாலும், வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாகத் திகழும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி பழங்குடியினர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசை எதிர்த்துப் போராடி வந்தனர்.
இந்த நிலையில், புதிய அதிபராக மன்சூர் ஹாதி பதவியேற்றதற்குப் பிறகு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கை மேலோங்கியது.
அதனைத் தொடர்ந்து, யேமனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய அவர்கள், தலைநகர் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் உதவியுடன் அவர்கள் தலைநகரைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, அதிபர் மன்சூர் ஹாதி, சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில், மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015-ஆம் ஆண்டு விமானத் தாக்குதலைத் தொடங்கியது.
அதிலிருந்து யேமன் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து, சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். இந்தப் போர் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகளும், பொதுமக்களும் நோய்கள் மற்றும் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. நம்பிக்கை

யேமனில் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கடந்த செப்டம்பர் மாதமே ஐ.நா. மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், இந்த முறை பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக ஐ.நா. நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யேமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் மார்ட்டின் க்ரிஃபித்ஸ் கூறியதாவது:
யேமன் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதில் தற்போது இரு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக, அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments