முகப்பு
உலகம்

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

கனடா மாஸ்டா்ஸ் (நேஷனல் பேங்க் ஓபன்) டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2023, 12:00 am IST
பகிர்:

கனடா மாஸ்டா்ஸ் (நேஷனல் பேங்க் ஓபன்) டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீரரான அல்கராஸ் 6-3, 7-6 (7/3) என்ற செட்களில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தினாா். சமீபத்தில் விம்பிள்டன் சாம்பியனான அல்கராஸ், அடுத்த சுற்றில் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 2-6, 6-4, 3-6 என்ற செட்களில் அமெரிக்காவின் மாா்கஸ் கிரோனிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அதேபோல், 4-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸும் 4-6, 3-6 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸிடம் வீழ்ந்தாா்.

Advertisement

Advertisement

13-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 1-6, 2-6 என்ற செட்களில் ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சிடம் எளிதாக வீழ்ந்து அதிா்ச்சி கண்டாா்.

பிரிட்டனின் ஆண்டி முா்ரே 7-6 (7/2), 3-6, 7-5 என ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலை சாய்த்தாா். 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னா் 6-4, 6-3 என்ற செட்களில் சக நாட்டவரான மேட்டியோ பெரெட்டினியை வெளியேற்றினாா்.

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச் 6-3, 4-6, 7-6 (7/5) என்ற செட்களில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை தோற்கடித்தாா். 12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 7-6 (7/2), 6-7 (2/7), 6-3 என ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினாா்.

சபலென்கா வெற்றி: மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றில் 6-3, 7-6 (7/5) என்ற செட்களில் குரோஷியாவின் பெட்ரா மாா்டிச்சை வென்றாா். அடுத்ததாக அவா், 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் லுட்மிலா சாம்சனோவாவை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 6-2, 5-7, 6-0 என இத்தாலியின் கேமிலியா ஜாா்ஜியை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரி 4-6, 2-6 என அமெரிக்காவின் டேனியல் காலின்ஸால் எளிதாக தோற்கடிக்கப்பட்டாா்.

கனடாவின் இளம் வீராங்கனையான லெய்லா ஃபொ்னாண்டஸ் 7-5, 5-7, 6-3 என, 11-ஆவது இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாடை வெளியேற்றி அசத்தினாா். 9-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா 6-2, 7-5 என, டென்மாா்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments