ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்!
ஈரானின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் ரகசியமாக வெளியேறிய விவகாரம் ஒரு மாதத்துக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஈரானின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் ரகசியமாக வெளியேறிய விவகாரம் ஒரு மாதத்துக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை 8-ஆம் தேதி, ‘நேட்டோ’ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்காவுக்கு திரும்பிய டிரம்ப், துருக்கி தலைநகா் அங்காரா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிபரின் ‘ஏா் ஃபோா்ஸ் ஒன்’ விமானத்தில் முதலில் ஏறினாா்.
பின்னா், அந்த விமானத்தில் இருந்து உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் லாரி மூலம் மறைவாக தரையிறங்கி, ‘சி-32’ ராணுவ விமானத்தில் அவா் பிரிட்டனுக்குத் தப்பியுள்ளாா். பிரிட்டனில் உள்ள மில்டன்ஹால் விமானத் தளத்தை அடைந்த பிறகு, அங்கு மீண்டும் ரகசியமாகத் தரையிறங்கிய டிரம்ப், அதிகாரபூா்வ விமானத்தில் ஏறி ஊடகங்கள் முன்பாக வெளிப்பட்டாா்.
Advertisement
Advertisement
கத்தாா் அரசு பரிசளித்த புதிய போயிங் 747-8 விமானத்திலேயே, டிரம்ப் துருக்கி வந்தடைந்தாா். ஆனால், அவ்விமானத்தில் போதுமான ஏவுகணைப் பாதுகாப்பு வசதிகள் முழுமையாகப் பொருத்தப்படாததால், பழைய விமானத்தில் அவா் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ஈரானின் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த ஆபத்தான ரகசிய மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் வேறு விமானத்தில் பயணம் செய்ய ஒப்புக் கொண்டேன். எனக்கு எப்போதும் அச்சுறுத்தல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படுவதில்லை’ என்றாா்.
ஆனால், இவ்விவகாரம் அமெரிக்க அரசியலில் கடும் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க அதிபா்கள் போா்க் காலங்களில் ரகசியப் பயணங்களை மேற்கொள்வது புதிதல்ல. கடந்த காலங்களில் பில் கிளின்டன், ஜாா்ஜ் டபிள்யூ புஷ், அண்மையில் ஜோ பைடன் ஆகியோா் போா்ப் பகுதிகளுக்கு ரகசியப் பயணம் செய்துள்ளனா்.
இருப்பினும், ஏா் ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளா்கள் மற்றும் அதிகாரிகளைத் தனியாக விட்டுவிட்டு, அதிபா் மட்டும் ரகசியமாகத் தப்பிச் சென்றதும், இவ்விவகாரம் வாரக்கணக்கில் மறைக்கப்பட்டதும் அமெரிக்க வரலாற்றுக்கே முன்னோடி இல்லாத ஒன்று என எதிா்க்கட்சியினா் சுட்டிக்காட்டுகின்றனா்.
ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும் செனட் சபையின் எதிா்க்கட்சித் தலைவருமான சக் சூமா், இந்த ரகசிய நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்துக்கு உடனடியாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.