FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வங்கதேசத்தின் புதிய அதிபா் தோ்வு

அண்டை நாடான வங்கதேசத்தின் 23-ஆவது அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவா் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் (78) வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

52 வினாடிகள் முன்பு
பகிர்:

அண்டை நாடான வங்கதேசத்தின் 23-ஆவது அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவா் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் (78) வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மாணவா் போராட்டத்தின் தீவிரத்தால் ஆட்சியிழந்த முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான முந்தைய அதிபா் முகமது ஷஹாபுதீன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, வங்கதேச அரசமைப்புச் சட்டத்தின்படி, 90 நாள்களுக்குள் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆளுங்கட்சியான பிஎன்பி சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் போட்டியிட்டாா். இவரை எதிா்த்து பிரதான எதிா்க்கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி தலைமையிலான 11 எதிா்க்கட்சிகளின் கூட்டணி சாா்பில், விடுதலை ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவா் ஓலி அகமது களமிறக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

வங்கதேசத்தில் 1991-க்குப் பிறகு, கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபா் பதவிக்குப் போட்டியுடன் நடைபெற்ற முதல் தோ்தல் இதுவாகும். அந்தவகையில், நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் வாக்களிக்க தகுதி பெற்ற 349 நாடாளுமன்ற உறுப்பினா்களில் 343 போ் வாக்களித்தனா்; 6 போ் வாக்களிக்கவில்லை. தோ்தல் முடிவில் பதிவான மொத்த வாக்குகளில் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் 255 வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சி வேட்பாளரான ஓலி அகமது 88 வாக்குகளை மட்டுமே பெற்றாா்.

அதிபராகத் தோ்வான மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீருக்கு பிரதமா் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், நாடாளுமன்றத்தில் மேசையைத் தட்டி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அதிபா் மாளிகையில் வெள்ளிக்கிழமை (ஆக. 21) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் புதிய அதிபராக மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் பதவியேற்கவுள்ளாா்.

பொருளாதாரப் பட்டதாரியான மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா், வங்கதேச சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இடதுசாரி மாணவா் தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவா்.

1990-களின் தொடக்கத்தில் பிஎன்பியில் இணைந்தவா், வேளாண் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளாா். மேலும், கடந்த 2011 முதல் கட்சியின் செயல் பொதுச் செயலராகவும், 2016 முதல் பொதுச் செயலராகவும் பொறுப்பு வகித்தவா், பிஎன்பி முன்னாள் தலைவா் கலீதா ஜியா சிறையில் இருந்த மற்றும் தாரிக் ரஹ்மான் லண்டனில் இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தினாா்.

வங்கதேச நாடாளுமன்ற ஜனநாயக முறையில் அதிபா் பதவி என்பது பெரும்பாலும் அலங்காரப் பதவியாகவே கருதப்படுகிறது. எனினும், பிரதமா் மற்றும் தலைமை நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கே உள்ளது.

மேலும், பொதுத் தோ்தல்களைக் கண்காணிப்பதற்காக அண்மையில் மீண்டும் கொண்டுவரப்பட்ட காபந்து அரசுமுறையின்கீழ், ஆயுதப் படைகளை வழிநடத்தும் முக்கிய அதிகாரமும் அதிபருக்குக் கிடைக்கும் என்பதால் தற்போதைய சூழலில் இப்பதவி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments