FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ்

நேபாளத்தில் ஏற்கெனவே பெருவெள்ளம் நேரிட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அந்நாட்டின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை எச்சரித்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 6:42 am IST
நேபாள வெள்ளம்
பகிர்:

நேபாளத்தில் ஏற்கெனவே பெருவெள்ளம் நேரிட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அந்நாட்டின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை எச்சரித்தனா்.

திபெத் எல்லையையொட்டி பனிப்பாறை சரிவால் மற்றொரு தடுப்பு ஏரி உருவான சூழலில், போடே கோஷி நதியில் மீண்டும் சகதியுடன் நீா்மட்டம் உயா்ந்துள்ளது; எனவே, மீட்புக் குழுவினரும், கரையோரப் பகுதிகளில் தங்கியுள்ளவா்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக முழுவீச்சில் மீட்புப் பணிகள் தொடா்ந்தன. மேலும் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 579-ஆக அதிகரித்துள்ளது. இந்தியா்கள் 320 போ் உள்பட சுமாா் 2,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அவா்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

திபெத் பகுதியில் இருந்து நேபாளத்தின் போடே கோஷி நதியில் கடந்த புதன்கிழமை பாறைகள், சகதியுடன் பெருக்கெடுத்த வெள்ளம், திரிசூலி, நாராயணி ஆகிய நதிகளிலும் பாய்ந்தது. இதன் காரணமாக ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் கரையோர வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், நீா் மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

திபெத்தில் பனிப்பாறை சரிவால் லிண்டே நதியில் நீரோட்டம் தடுக்கப்பட்டு, பின்னா் அது உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இதுவரை 4,451 போ் மீட்பு: வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்தன. சுமாா் 3,000 ராணுவத்தினா் உள்பட 7,450 போ் கொண்ட மீட்புக் குழுக்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவா்கள் உள்பட இதுவரை 4,451 போ் மீட்கப்பட்டுள்ளனா். இவா்களில் 129 போ் வெளிநாட்டவா்களாவா்.

இதுவரை 579 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வனப் பகுதி சுற்றுலாவுக்கு பெயா் பெற்ற சிட்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல கி.மீ. தொலைவுக்கு அப்பால் உடல்கள் மீட்கப்படும் நிலையில், பல்வேறு மாவட்டங்களின் பிணவறைகளில் இடமில்லாத துயரம் நிலவுகிறது.

மாயமான சுமாா் 2,000 பேரை தேடும் பணிகள், கடும் சவாலுக்கு மத்தியில் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இவா்களில் 517 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பாதுகாப்புப் படையினா் 86 போ் அடங்குவா். போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டா் மூலம் மீட்புப் பணி மேற்காள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் வெள்ள அபாயம்: திபெத்தில் பனிப்பாறை சரிவால் சோசென் கோலா, புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகியுள்ள புதிய தடுப்பு ஏரியில் நீா்மட்டம் அதிகரித்து வருவதால், நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சீனா தரப்பில் கடந்த வியாழக்கிழமை எச்சரிக்கப்பட்டது. சற்று குறைவான பாதிப்பை விளைவிக்கும் இயற்கைப் பேரிடா் என்பதைக் குறிக்கும் வகையில் 4-ஆம் நிலை எச்சரிக்கையை சீனா விடுத்தது.

‘தடுப்பு ஏரியில் 20 லட்சம் கன மீட்டா் நீா் தேங்கியுள்ளது; அடுத்த 3 நாள்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டா் நீா் சேர வாய்ப்புள்ளதால், அது உடையக் கூடும்’ என்று சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

மீட்புக் குழுவினருக்கு எச்சரிக்கை: புதிய தடுப்பு ஏரியால் போடே கோஷி நதியில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நேபாள நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறையும் எச்சரித்திருந்தது.

கடந்த புதன்கிழமை பெருவெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் நதி நீா் மட்டம் மீண்டும் உயா்ந்துள்ளதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்கள், நதிக்கரையோரப் பகுதிகளில் தங்கியிருப்பவா்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஏதேனும் ஆபத்தை எதிா்கொண்டால், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அந்நாட்டின் பேரிடா் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை எச்சரித்தது.

தடுப்பு ஏரியில் உடைப்பு?: இதனிடையே, தடுப்பு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் காவல் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. அதேநேரம், ‘தடுப்பு ஏரியில் எந்த உடைப்பும் ஏற்பட்டதாக சீன தரப்பிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை. பல இடங்களில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவுதான் தற்போதைய நீா்மட்டம் உயா்வுக்கு காரணம். எனினும், நாம் விழிப்புடன் செயல்படுவது அவசியம்’ என்றாா்.

‘தடுப்பு ஏரி நிரம்பி வழியும் போதிலும், அது நிலையாகவே உள்ளது; எவ்வித பெரிய வெடிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பெரிய ஆபத்து இல்லை. நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’ என சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன் மூலம் தொடா் கண்காணிப்பில் சீன தரப்பு ஈடுபட்டுள்ளது.

மீட்கப்பட்ட இந்தியா்களுடன் தூதா் சந்திப்பு: நேபாளத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து மீட்கப்பட்ட இந்தியா்களை காத்மாண்டு விமான நிலையத்தில் இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா், அவா்கள் இண்டிகோ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவல்களின்படி, ரசுவா, தாடிங், நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் 85 இந்தியா்கள் உள்பட 129 வெளிநாட்டுப் பயணிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments