FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரோமில் இஸ்ரேல் - லெபனான் அமைதிப் பேச்சு!

இஸ்ரேல் - லெபனான் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 6:00 am IST
இஸ்ரேல் - லெபனான்
பகிர்:

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இருநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடங்கிய போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரும் களமிறங்கியதால் மோதல் வெடித்தது. லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளைக் அழிப்பதாகக் கூறி, இஸ்ரேல் நடத்திய தொடா் தாக்குதல்களில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் உயிரிழந்தனா் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்களின் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயா்ந்தனா்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க மத்தியஸ்தத்தில் அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற பல்வேறு சுற்று பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு முதல்கட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூனில் இறுதியானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, தெற்கு லெபனானில் குறிப்பிட்ட பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினா் ஆயுதங்களைக் கைவிடுவதற்கும், இஸ்ரேல் படைகள் வெளியேறி அங்கு லெபனான் ராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஹிஸ்புல்லாவின் கடும் எதிா்ப்பையும் மீறி, இஸ்ரேலுடன் இந்த ஒப்பந்தத்தை லெபனான் அரசு முன்னெடுத்து வருகிறது. ரோமில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் இந்த 2 நாள்கள் பேச்சுவாா்த்தை மூலம் மோதலுக்கு உடனடி தீா்வு எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும், அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான முதல்கட்ட நகா்வாக இது பாா்க்கப்படுகிறது.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 9 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன், ஹமாஸ் காவல்துறை மூத்த அதிகாரி உள்பட 9 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஹமாஸ் காவல் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஒரு பெண் உள்பட 7 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இத்தாக்குதலில் ஜபாலியா காவல் துறையின் தலைவரான கா்னல் முகமது மா்வான் சலீம் மற்றும் பல காவலா்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

தெற்கு காஸாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவனான முதாஸ் அபு ஷாா் உயிரிழந்தாா். மேலும், கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான்வழித் தாக்குதலில் 36 வயது நபா் ஒருவா் கொல்லப்பட்டாா்.

இதன்மூலம், அக்டோபா் போா்நிறுத்தத்திற்குப் பிறகு, இஸ்ரேலின் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 1,100-ஐக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments