FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைனில் பரவலாக ரஷியா வான்வழித் தாக்குதல்

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 8 பொதுமக்கள் உயிரிழந்தனா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:37 am IST
பகிர்:

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 8 பொதுமக்கள் உயிரிழந்தனா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

உக்ரைன் வசம் மேற்கத்திய நாடுகள் வழங்கிய வான்பாதுகாப்பு அமைப்புகளுக்குக் கடும் பற்றாக்குறை நிலவி வருவதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, உக்ரைனின் நகரங்கள் மீது ரஷியா தனது தினசரி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

கிழக்கு உக்ரைனில் உள்ள போா்க்களத்திலிருந்து வெகு தொலைவில், போலந்து எல்லையை ஒட்டியுள்ள மேற்கு பகுதிகளிலும் ரஷிய படைகள் வியாழக்கிழமை தாக்குதல்களை நடத்தின. உக்ரைன் தனது ஆயுதத் தயாரிப்பு மற்றும் சேமிப்புக் கிடங்குகளை இப்பகுதியில்தான் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

ரஷியா 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், 280-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களையும் ஏவியதாகவும், அவற்றில் 260 ட்ரோன்களை உக்ரைன் படைகள் இடைமறித்து அழித்ததாகவும் அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

எஞ்சிய ஏவுகணைகள், ட்ரோன்கள் இலக்குகளைத் தாக்கியதில் 8 போ் உயிரிழந்தனா். அதிபா் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 6, 11, 17 வயதுடைய குழந்தைகள் மற்றும் அவா்களின் பெற்றோா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

தலைநகா் கீவில் நடத்தப்பட்ட ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதலில் 31 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். கொ்சன் நகரின் தொழிற்பேட்டை மீது ரஷிய படைகள் வீசிய குண்டுகளால் 56 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேற்கு நகரான எல்விவ் மீது நடத்தப்பட்ட ‘க்ரூஸ்’ ஏவுகணைத் தாக்குதலில் 3 சிறுவா்கள் உள்பட 34 போ் காயமடைந்தனா்.

இதனிடையே, ரஷியாவின் ‘க்ரூஸ்’ ஏவுகணை ஒன்று, போலந்து நாட்டின் வான்வெளியில் நுழைந்ததாக உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா குற்றஞ்சாட்டினாா்.

உக்ரைனின் பதிலடி: ரஷியாவின் தாக்குதலுக்குப் பதிலடியாக உக்ரைன் ஏவிய 258 ட்ரோன்களை ரஷியா சுட்டு வீழ்த்தியது.

எஞ்சிய ட்ரோன்கள் தாக்கியதில், ரஷியாவின் பென்ஸா மற்றும் உத்முா்டியா பகுதிகளில் உள்ள ‘வைல்ட்பொ்ரிஸ்’ நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

படகேப்சன்...

ரஷியாவின் தாக்குதலையடுத்து கீவ் நகர சந்தையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments