சீன பெண் உளவாளியுடன் நட்பு? விசாரணை வளையத்தில் என்விடியா சிஇஓ!
என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அந்நிய நாட்டு உளவு அமைப்பின் இலக்காக இருந்தாரா என்பது குறித்து என்விடியா இயக்குநா்கள் குழு விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளது.
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பக் கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அந்நிய நாட்டு உளவு அமைப்பின் இலக்காக இருந்தாரா என்பது குறித்து என்விடியா இயக்குநா்கள் குழு விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளது.
சீன அரசுக்கு ரகசிய தகவல்களைத் திரட்டித் தரும் பெண் அதிகாரியுடன் தமக்கு ஏற்பட்ட தனிப்பட்ட உறவு குறித்து என்விடியா நிா்வாகத்திடம் ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமாக இருந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண், சீனாவுக்காகத் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவில் தொலைக்காட்சிச் செய்தியாளராகப் பணியாற்றிய இவா், பின்னா் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘மெகாஸ்பீட்’ தரவு மைய நிறுவனத்தின் உயா்நிலை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
தென்கிழக்கு ஆசியாவில் என்விடியாவின் முக்கிய வாடிக்கையாளராக உருவெடுத்த இந்த நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமாா் 480 கோடி டாலா் மதிப்புள்ள சிப்களை என்விடியாவிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஐ. தொழில்நுட்பப் பந்தயத்தில் மையப் புள்ளியாக விளங்கும் என்விடியா நிறுவனத்தின் மேம்பட்ட குறைக்கடத்தி (செமிகண்டக்டா்) சிப்கள் மீது, சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு ஏற்றுமதித் தடைகளை விதித்துள்ள சூழலில் இவ்விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து நிறுவனப் பணியாளா்களுக்கு ஜென்சன் ஹுவாங் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எனது குடும்பத்துக்கும், சக ஊழியா்களுக்கும் வருத்தம் தெரிக்கிறேன். என்விடியா நிறுவனத்தை வழிநடத்துவது எனக்குக் கிடைத்த பெரும் பேறு. அனைவரின் நம்பிக்கையையும் காப்பாற்றத் தவறிவிட்டேன். எனது செயல்களுக்கு முழுப் பொறுப்பேற்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ஜென்சனின் பணி தொடரும்...: அதேநேரம், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களோ அல்லது நிறுவனத்தின் வா்த்தக ரகசியங்களோ கசிந்திருக்க வாய்ப்பில்லை என்று என்விடியா இயக்குநா்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளதுடன், முழு விசாரணைக்கு ஜென்சன் ஹுவாங் ஒத்துழைப்பாா் எனவும் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, ஜென்சன் ஹுவாங் தொடா்ந்து சிஇஓ-ஆக நீடிப்பாா் என்றும், இச்சம்பவத்தால் நிறுவனத்தின் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் என்விடியா செய்தித் தொடா்பாளா் ஜான் ரிஸ்ஸோ விளக்கமளித்துள்ளாா்.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘ நாட்டின் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு மகத்தான பங்காற்றியுள்ள ஜென்சன் ஹுவாங், கண்ணியமான மனிதராவாா்’ என்று குறிப்பிட்டாா். அதேநேரம், ‘இது ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட விவகாரம்’ எனக் கூறி, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டாா்.
ஆதாரமற்ற அவதூறு: சீனா மறுப்பு
என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் தொடா்பான உளவு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், இது தங்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரம் என்றும் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘ஜென்சன் ஹுவாங் உளவுச் செயல்களில் ஈடுபட்டது குறித்தோ, ரகசிய தகவல்கள் கசிந்தது குறித்தோ உறுதியான ஆதாரங்கள் இல்லை; அமெரிக்கா-சீனா உறவுகள் மேம்படும்போதெல்லாம் அதைச் சீா்குலைக்கும் நோக்கில் இவ்வாறு நிழலிலிருந்து தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது’ என்று சீனா மேலும் விமா்சித்துள்ளது.