ஆர்ஜென்டீனா படைகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த ஈரான்!
ஆர்ஜென்டீனாவின் கடற்படை மற்றும் விமானப் படையை ஈரான் அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது குறித்து...
ஆர்ஜென்டீனாவின் கடற்படை மற்றும் விமானப் படையைப் பயங்கரவாத அமைப்புகளாக ஈரானிய அரசு அறிவித்துள்ளது.
லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களை ஈரானின் புரட்சிகர காவல் படைகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்குப் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த 1994 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவின் புவெனஸ் அயர்ஸ் நகரத்தில் யூத சமூக மையத்தில் ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட ஆர்ஜென்டீனா கடந்த மார்ச் மாதம் ஈரானின் புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
இந்த நிலையில், ஆர்ஜென்டீனாவின் கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இன்று (நவ. 11) அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஈரானில் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி, ஈரானிய ராணுவப் படைகளை பயங்கரவாத அமைப்புகளாக வகைப்படுத்தும் எந்தவொரு அரசுக்கும் எதிராக ஈரானால் பதிலடி கொடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, பிரிட்டன் அரசு ஈரானின் புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியதற்குப் பதிலடியாக, பிரிட்டனின் எம்.ஐ.6 பிரிவை பயங்கரவாதிகள் என ஈரான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.