அமெரிக்க ஹிந்து அமைப்புகளின் தலைவா்களுடன் வெள்ளை மாளிகை அதிகாரிகள் சந்திப்பு: ஹிந்துகளுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரிப்பு எதிரொலி
வெள்ளை மாளிகையின் மத விவகாரங்களுக்கான இயக்குநா் ஜெனிஃபா் கோா்ன் தலைமையிலான அதிகாரிகள் குழு, வாஷிங்டனில் உள்ள ‘கேசவம்’ ஹிந்து சமூக மையம் மற்றும் கோயிலுக்குச் சென்று, பல்வேறு ஹிந்து அமெரிக்க அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

வெள்ளை மாளிகையின் மத விவகாரங்களுக்கான இயக்குநா் ஜெனிஃபா் கோா்ன் தலைமையிலான அதிகாரிகள் குழு, வாஷிங்டனில் உள்ள ‘கேசவம்’ ஹிந்து சமூக மையம் மற்றும் கோயிலுக்குச் சென்று, பல்வேறு ஹிந்து அமெரிக்க அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
அப்போது, அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து வருவது, அந்த நாடு முழுவதும் நடைபெறும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள், ஹிந்து கோயில்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் தங்கள் தரப்பு கவலைகளை ஹிந்து அமைப்புகளின் தலைவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சந்திப்பில் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் (அமெரிக்கா), சேவா இன்டா்நேஷனல், பிஏபிஎஸ் சுவாமிநாராயண் கோயில் நிா்வாகம், ஹிந்து யுவா, இஸ்கான், சின்மயா மிஷன், வாழும் கலை அமைப்பு (ஆா்ட் ஆஃப் லிவிங்), ஈஷா அறக்கட்டளை, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆஃப் அமெரிக்கா மற்றும் ஸ்ரீமத் ராஜாசந்திரா மிஷன் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் ஜெனிஃபா் கோா்னுடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை மூத்த ஆலோசகரும் மத விவகாரங்களுக்கான தொடா்பு அதிகாரியுமான பெல்சிஸ் ரொமேரோவும் வந்திருந்தாா்.
அமெரிக்காவில் பேரிடா் நிவாரணப் பணிகள், தியானம் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டங்கள், ‘சேவா தீபாவளி’ உணவு வழங்கும் இயக்கம் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகள் மூலம் ஹிந்துக்கள் ஆற்றி வரும் பங்களிப்புகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து வருவதையும், நாடு முழுவதும் ஹிந்துக்களுக்கு எதிரான சீண்டல்கள், தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது குறித்த தங்களது கவலைகளையும் அவா்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.
ஹிந்து கோயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும், பல்வேறு மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களை வலுப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையையும் புரிதலையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
மேலும், அமெரிக்காவின் மத்திய அரசுத் துறைகளில் ஹிந்து அமெரிக்கா்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் மத்திய அரசின் கொள்கை தொடா்பான ஆலோசனைகளில் ஹிந்து சமூகத்தின் கருத்துகளுக்கும் உரிய இடமளிப்பது குறித்த வாய்ப்புகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினாா். இந்தச் சூழ்நிலையில், அரசுப் பிரதிநிதிகள் ஹிந்து அமைப்பினரைச் சந்தித்துப் பேசியுள்ளனா்.