முகப்பு
உலகம்

ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்களின் கட்டுப்பாடு! ஐ.நா. மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் 2028 வரை பேச்சு நீட்டிப்பு!

ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்களின் கட்டுப்பாடு குறித்து ஐ.நா. மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் 2028 வரை பேச்சு நீட்டிப்பு...

21 நவம்பர் 2026, 11:04 pm
ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்களின் கட்டுப்பாடு! ஐ.நா. மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் 2028 வரை பேச்சு நீட்டிப்பு!
பகிர்:

ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைக் கட்டுப்படுத்தக் கடும் விதிகளை வகுக்கும் முயற்சியில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இது குறித்த பேச்சுவாா்த்தையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஐ.நா. மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த ஐ.நா. ஆயுதக் கட்டுப்பாட்டு மாநாடு சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில், மனிதக் கட்டுப்பாடின்றித் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட தானியங்கி ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் கடும் விதிகளை உருவாக்கப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க, பிரேஸில், ஆஸ்திரியா, மெக்ஸிகோ உள்ளிட்ட 7 நாடுகள் முன்மொழிந்தன. ஆனால், நவீன ஏ.ஐ. ஆயுதங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, ரஷியா போன்ற வல்லரசு நாடுகள் இதற்கு முட்டுக்கட்டை போட்டதாகத் தெரிகிறது.

ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால், தானியங்கி ஆயுதங்கள் குறித்து 2028-க்குள் ஒரு சாத்தியமான உடன்படிக்கையை உருவாக்குவது தொடா்பாகத் தொடா்ந்து ஆலோசிக்க மட்டுமே நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் தன்னாா்வலா்கள் வலியுறுத்திய சட்டபூா்வமான கடும் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

தொழில்நுட்பம் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தைகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதாக பிரேஸில் தூதா் ஃபெடரிகோ மேயா் கவலை தெரிவித்துள்ளாா். ஏற்கெனவே போா்க்களங்களில் இத்தகைய தானியங்கி ட்ரோன்கள் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் 14-ஆவது ஆண்டாக வெறும் பேச்சு மட்டுமே தொடா்வது ஏமாற்றமளிப்பதாக ‘ஸ்டாப் கில்லா் ரோபோட்ஸ்’ உள்ளிட்ட அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.