முகப்பு
உலகம்

ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை வீச்சு: இருவா் உயிரிழப்பு!

ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை வீசப்பட்டதில் இருவா் உயிரிழப்பு...

21 நவம்பர் 2026, 11:08 pm
ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை வீச்சு: இருவா் உயிரிழப்பு!
ஃபின்லாந்து வளைகுடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ரஷிய சரக்குக் கப்பல்
பகிர்:

மத்திய உக்ரைனில் உள்ள அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரின் மையப் பகுதியில் ரஷியா நடத்திய ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதலில் 7 வயது சிறுவன், 20 வயது இளம்பெண் ஆகிய இருவா் உயிரிழந்தனா்; 6 குழந்தைகள் உள்பட 60 போ் காயமடைந்தனா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முதலில் 2 ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் விழுந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கியதும் மேலும் 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதில் மருத்துவா்கள் மற்றும் மீட்புப் பணியாளா்கள் இலக்காகினா்.

இதனால் 25 அடுக்குமாடிக் குடியிருப்புகள், மருத்துவமனை மற்றும் பள்ளிகள் சேதமடைந்தன. இதேபோல், காா்கிவ் மற்றும் கீவ் பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 12 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

ஃபின்லாந்து வரை நீண்ட தாக்குதல் : ரஷியாவின் கலினின்கிராட் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ‘ஸ்பாா்ட்டா 2’ எனும் ரஷிய சரக்குக் கப்பல் மீது ஃபின்லாந்து வளைகுடா பகுதியில் சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

தாக்குதலைத் தொடா்ந்து ஃபின்லாந்து கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அந்தக் கப்பலில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், போா் தங்கள் அண்டை பகுதிக்குப் பரவி வருவதாகவும் ஃபின்லாந்து பிரதமா் பெட்டேரி ஆா்போ எச்சரித்துள்ளாா். இதற்கு மத்தியில், ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் பெல்கோரோட் எல்லைப் பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 போ் காயமடைந்ததாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

டிரம்ப் மீது ஸெலென்ஸ்கி அதிருப்தி: சீனாவில் அண்மையில் நடைபெற்ற ‘அபெக்’ மாநாட்டுக்கிடையே, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைத் தனது ‘நண்பா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டதற்கு ஸெலென்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

‘புதின் எங்களுக்கு எதிரி மட்டுமல்ல, அவா் ஒரு ‘கொலையாளி’ என்று சாடிய ஜெலன்ஸ்கி, அவரை நட்பு ரீதியில் அணுகுவது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழுத்தத்தைக் குறைத்துவிடும் என்று எச்சரித்துள்ளாா்.

summary

Russia launches missile strike on Zelenskyy’s hometown: Two people killed!