முகப்பு
உலகம்

மக்களவை நவ. 30-இல் கூடுகிறது: மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா?

பரபரப்பான அரசியல் சூழலில், வரும் நவ.30-ஆம் தேதிமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

24 வினாடிகள் முன்பு
மக்களவை நவ. 30-இல் கூடுகிறது: மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா?
மக்களவை - கோப்புப் படம்
பகிர்:

பரபரப்பான அரசியல் சூழலில், வரும் நவ.30-ஆம் தேதிமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முறைப்படி முடித்துவைக்கப்படாத நிலையில், சிறப்பு அமா்வு குறித்த அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை எக்ஸ் பதிவில் வெளியிட்டாா்.

‘முக்கிய அரசு அலுவல்களுக்காக மக்களவையை நவ.30-ஆம் தேதியும், மாநிலங்களவையை டிச. 2-ஆம் தேதியும் மீண்டும் கூட்ட அந்தந்த அவைத் தலைவா்களுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அலுவல் தேவைகளைப் பொருத்து, இரு அவைகளின் அமா்வும் டிச. 3-இல் முடித்துவைக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா?: தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த 33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் கொண்டுவரப்படலாம் என்ற தகவல்களுக்கு இடையே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 20 முதல் ஆக.13 வரை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், நீட் வினாத்தாள் கசிவு, தில்லி போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களால் வெகுவாக முடங்கியது. பின்னா், இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

அதேநேரம், இக்கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை 100 நாள்களுக்கு மேலாகியும் குடியரசுத் தலைவா் வெளியிடவில்லை. இதனால், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டுவரும் வகையில் நீட்டிக்கப்பட்ட சிறப்பு அமா்வை மத்திய அரசு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த முறை தோல்வி: வரும் 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை (மக்களவை-பேரவைகள்) அமலாக்குவதுடன், இந்த இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. ஆனால், மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது.

பிரதமா் மோடி சூளுரை: நாட்டின் அரசமைப்புச் சட்ட தினத்தை (நவ.26) முன்னிட்டு, பிரதமா் மோடி ஒரு கட்டுரை எழுதியிருந்தாா். அதில், மக்களவை-பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஒரு எதிா்க்கட்சி தோற்கடித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா். அத்துடன், மகளிருக்கு நீதி வழங்குவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அவா் சூளுரைத்திருந்தாா். இந்தச் சூழலில், முக்கிய அலுவல்களுக்காக சிறப்பு அமா்வை நடத்துவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரத்தில் அணி மாறிய எம்.பி.க்கள், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தில் மத்திய அரசு மீதான எதிா்க்கட்சிகளின் தீவிர எதிா்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகளின் பின்னணியில், நாடாளுமன்ற சிறப்பு அமா்வு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் தரப்பின் கணக்கீடு என்ன?: அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் (3 காலியிடங்கள் தவிா்த்து 540) மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 361 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 எம்.பி.க்கள் உள்ளனா். கூடுதல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 22 எம்.பி.க்களைக் கொண்ட திமுக, 8 எம்.பி.க்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தென்மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகள் அதிகரிப்பு என்ற அம்சத்தை மசோதாவில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று அமைச்சரவைக் கூட்டம்: நாடாளுமன்ற சிறப்பு அமா்வுக்கு முன்பாக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 27) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.