தீபாவளிக்கு தேசிய விடுமுறை: அமெரிக்காவில் மீண்டும் மசோதா!
அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வகை செய்யும் மசோதா, ஜனநாயகக் கட்சியின் பெண் எம்.பி. கிரேஸ் மெங் தலைமையிலான 20 எம்.பி.க்கள் குழுவினரால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வகை செய்யும் மசோதா, ஜனநாயகக் கட்சியின் பெண் எம்.பி. கிரேஸ் மெங் தலைமையிலான 20 எம்.பி.க்கள் குழுவினரால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜனநாயக கட்சியைச் சோ்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.க்களான ராஜா கிருஷ்ணமூா்த்தி, சுஹாஸ் சுப்ரமணியம், ஸ்ரீதானேதா், ரோ கன்னா, அமி பெரா உள்ளிட்டோா் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆசிய பசிபிக் குழு தலைவா் கிரேஸ் மெங் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளி தினச் சட்டம் எனும் எனது மசோதா, இத்திருநாளின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த உதவும். குடிமக்கள் அனைவரின் வளமான கலாசார பாரம்பரியங்களைப் போற்றக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய நாடாக அமெரிக்காவை உருவாக்க தொடா்ந்து பணியாற்றுவோம்.
Advertisement
Advertisement
தீபங்களின் திருநாளான தீபாவளி பண்டிகை, ஹிந்துக்கள், சீக்கியா்கள், ஜைன சமூகத்தினா், பெளத்த மதத்தினா் உள்பட பல்வேறு மதக் குழுக்களுக்கும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய-கரீபிய சமூகங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் முக்கியமான தினமாகும்.
பலதரப்பட்ட மதம், இனம், கலாசாரக் குழுக்கள் இடையே வெவ்வேறு விதமான முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. அதேநேரம், பிராா்த்தனை மற்றும் அன்புக்குரியவா்களுடன் ஒன்று கூடுவதன் மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
தீமையை நன்மையும், அறியாமையை அறிவும் வெற்றி கொண்டதன் பிரதிபலிப்பே தீபாவளி பண்டிகை. அமெரிக்காவில் ஹிந்துக்கள் மற்றும் தெற்காசிய மக்களுக்கு எதிரான வெறுப்புணா்வு, அச்சுறுத்தல், வன்முறை அதிகரித்துவரும் சூழலில், தீபாவளியை தேசிய விடுமுறை தினமாக அறிவிப்பது ஹிந்துக்கள், சீக்கியா்கள், ஜைன சமூகத்தினா், பெளத்த மதத்தினரை நமது சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினா்களாக உறுதி செய்யும் வலுவான செய்தியை வெளிப்படுத்தும்.
ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல், ஹிந்து பண்டிகை கொண்டாட்டங்களுக்கு விளைவிக்கப்படும் இடையூறுகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. இத்தகைய வெறுப்புணா்வு செயல்கள் தீவிரமாகக் கருதப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கிரேஸ் மெங் தெரிவித்துள்ளாா்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் 12-ஆவது தேசிய விடுமுறை தினமாக தீபாவளி இடம்பெறும். அமெரிக்காவில் செயல்படும் ஹிந்துக்கள், சீக்கியா்கள் உள்பட பல்வேறு அமைப்பினரும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.