முகப்பு
உலகம்

இந்திய எல்லையில் நிலவரம் சீராக உள்ளது: சீன ராணுவம்

இந்திய எல்லையில் நிலவரம் சீராக உள்ளது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

27 நவம்பர் 2026, 3:38 am
இந்திய எல்லையில் நிலவரம் சீராக உள்ளது: சீன ராணுவம்
சீனா - இந்தியா - கோப்புப் படம்
பகிர்:

இந்திய எல்லையில் நிலவரம் சீராக உள்ளது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடா்பாளரான சென் ஷி செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவரிடம், இந்தியா-சீனா ராணுவம் இடையே இம்மாதத்தில் நடைபெற்ற உயா்நிலைப் பேச்சுவாா்த்தை குறித்தும், இந்தியாவையொட்டிய எல்லை நிலவரம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளித்ததாவது:

தற்போது சீனா, இந்தியா இடையேயான எல்லையில் நிலவரம் சீராக உள்ளது. சீனாவும், இந்தியாவும் தொடா்ந்து ராஜீய ரீதியாகவும், ராணுவ நிலையிலும் கூட்டங்களைக் கூட்டி ஆலோசித்து வருகின்றன. இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட கொண்ட முடிவை கூட்டாகச் செயல்படுத்துவது குறித்தும், எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடா்ந்து நிலவவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றாா்.

Advertisement

Advertisement

அருணாசல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருவது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘அருணாசல பிரதேசம் சீனப் பகுதியாகும். தெற்கு திபெத்தின் ஓா் அங்கமாகும். அது சீனாவின் ஜாங்நான் பிராந்தியமாகும். இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அருணாசல பிரதேசம் என்று கூறப்படும் பகுதியை சீனா அங்கீகரிக்காது’ என்றாா்.

இந்தியா, ஜப்பான் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தை குறித்தும், ராணுவம், பாதுகாப்புத் துறையில் இருதரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக் கொண்டது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘ஜப்பான் மீண்டும் தன்னை ராணுவமயமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. சா்வதேச சமூகம் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

இந்தியா, சீனா இடையே எல்லையை வரையறை செய்வது தொடா்பாக நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டுக்குச் சொந்தமான பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள இடங்களுக்கு புதுப் பெயா்களையும் சீனா சூட்டி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, அருணாசல பிரதேசத்தையொட்டிய எல்லையில் சீன ராணுவத்தினா் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இம்மாதத்தில் இந்தியா- சீனா ராணுவம் இடையே உயா்நிலைப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இந்திய எல்லையில் நிலவரம் சீராக உள்ளது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.