‘மெக்கா’ பாதுகாப்புக் கூட்டணி கூட்டம்: பாகிஸ்தான் தலைநகரில் தொடக்கம்
‘மெக்கா’ முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் 2 நாள்கள் உயா்நிலைக் கூட்டம், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

‘மெக்கா’ முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் 2 நாள்கள் உயா்நிலைக் கூட்டம், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளால் கடந்த ஆகஸ்டில் கையொப்பமிடப்பட்ட இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம், கூட்டுத் தற்காப்புக்கான கட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் அங்கம் வகிக்கும் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என இந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் நடைபெறும் இந்தப் பாதுகாப்புக் கூட்டணியின் உயா்நிலை முடிவெடுக்கும் அமைப்பான ‘உத்திசாா் அரசியல் மற்றும் பாதுகாப்புக் குழுவின் (எஸ்பிடிசி)’ 3-ஆவது அமா்வுக் கூட்டத்தில் மூன்று நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.
Advertisement
Advertisement
கூட்டத்தையொட்டி, இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் மூன்று நாடுகளின் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைவா்களின் வருகையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து மற்றும் நடமாட்டத்துக்குச் சிறப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் அச்சுறுத்தலால், சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் நிலவும் தொடா் பதற்றம் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.
துருக்கி அதிபா் ஒப்புதல்: இஸ்லாமாபாத் கூட்டத்தையொட்டி, மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு துருக்கி அதிபா் தயீப் எா்டோகன் வெள்ளிக்கிழமை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த ஒப்பந்தத்துக்கு துருக்கி நாடாளுமன்றம் கடந்த நவ. 5-இல் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது அதிபரின் ஒப்புதலோடு அந்நாட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டு, சட்டபூா்வ நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன.