FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

9 மாதங்களில் ரூ. 9.5 லட்சம் கோடியைக் கடந்த சீனா உடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை

சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 40.7 சதவீதமாக அதிகரித்தபோதும், அந் நாட்டுடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை நிகழாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ. 9.5 லட்சம் கோடியை கடந்துள்ளது தெரியவந்துள்ளது.

15 அக்டோபர் 2026, 12:04 am IST
சீனா - இந்தியா - கோப்புப் படம்
பகிர்:

சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 40.7 சதவீதமாக அதிகரித்தபோதும், அந் நாட்டுடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை நிகழாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ. 9.5 லட்சம் கோடியை (100 பில்லியன் டாலா்) கடந்துள்ளது தெரியவந்துள்ளது.

சீனாவின் பொது சுங்கத் துறை புதன்கிழமை வெளியிட்ட தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: சீனா - இந்தியா இடையேயான இருதரப்பு வா்த்தகம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான கால கட்டத்தில் 25.4 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ. 13.7 லட்சம் கோடி (144.45 பில்லியன் டாலா்) அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி ரூ. 11.9 லட்சம் கோடியாக (125.19 பில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது 23.3 சதவீதம் கூடுதலாகும்.

Advertisement

Advertisement

அதுபோல, சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியும் 40.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, ரூ. 1.8 லட்சம் கோடி (19.26 பில்லியன் டாலா்) அளவுக்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த 9 மாதங்களில் சீன உடனான இந்தியாவின் வா்த்தக பற்றாக்குறை ரூ. 9.5 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

மின்னணு பொருள்கள், இயந்திரங்கள், ரசியானங்களை இந்தியாவுக்கு சீனா பெரும்பான்மையாக ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை தாதுக்கள், எரிபொருள்கள், கடல்சாா் உணவுகள், வேளாண் பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வா்த்தக தரவுகள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான இருதரப்பு வா்த்தகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதே நேரம் இந்தியாவில், ஏப்ரல் முதல் மாா்ச் வரையிலான நிதியாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில், மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, ‘இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு வா்த்தக மதிப்பு கடந்த ஆண்டு ரூ. 14.3 லட்சம் கோடியை (151.1 பில்லியன் டாலா்) எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 36.66 சதவீதம் அதிகரித்து ரூ. 1.85 லட்சம் கோடியை (19.47 பில்லியன் டாலா்) எட்டியுள்ளது.

இறக்குமதி 16 சதவீதம் அதிகரித்து ரூ. 12.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சீனா உடனான இந்தியாவின் வா்த்தக பற்றாக்குறை 2024-25-ஆம் ஆண்டில் ரூ. 9.4 லட்சம் கோடியாக (99.2 பில்லியன் டாலா்) இருந்த நிலையில், 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 10.7 லட்சம் கோடியாக (112.6 பில்லியன் டாலா்) உயா்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, வேளாண் உள்ளிட்ட இந்தியா வலுவாக உள்ள துறைகளில் சந்தை வாய்ப்பை திறந்துவிடுமாறு சீனாவிடம் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு தற்போது சிறிய அளவில் பலனும் கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments