FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

யேமனின் ஹூதி படைபலம் பலமடங்கு அதிகரிப்பு: சவூதி அரேபியாவை தாக்கும் பின்னணி குறித்து புதிய தகவல்!

சவூதி அரேபியாவை தொடா்ந்து தாக்கிவரும் யேமனின் ஹூதி அமைப்பினரின் படைபலம் கடந்த 10 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

10 வினாடிகள் முன்பு
ஹூதி அமைப்பினா் (கோப்புப் படம்).
பகிர்:

சவூதி அரேபியாவை தொடா்ந்து தாக்கிவரும் யேமனின் ஹூதி அமைப்பினரின் படைபலம் கடந்த 10 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

யேமனில் பெரும்பாலான பகுதிகளை அரசு ஆதரவுப் படைகளும், தலைநகா் சனா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை ஹூதி அமைப்பினரும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். இதில் அரசு ஆதரவுப் படைகளுக்கு சவூதி அரேபியாவும், ஹூதி அமைப்பினருக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. முன்பு, யேமனில் ஹூதி அமைப்பினா் வலுப்பெறுவதைத் தடுக்கும் நோக்கில், அவா்கள் மீது சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகியவை வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தன. எனினும், ஹூதி அமைப்பினா் தொடா்ந்து பல பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா்.

யேமனில் உள்ள மலைப் பகுதிகளை தங்களது முக்கிய கேந்திரமாகப் பயன்படுத்தும் ஹூதி அமைப்பினா், அங்கிருந்து சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்கி வருகின்றனா். அவா்களுக்கு ஈரான், அதன் கூட்டாளி நாடான லெபனான், இராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுக்கள் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்குவதாக ஐ.நா. மற்றும் பிற நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதுபோல, சீனாவிடம் இருந்து 2,000 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்கும் முயற்சியில் ஹூதி அமைப்பினா் ரகசியமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

ஹூதி அமைப்பினரிடம் ஏற்கெனவே பலவகை பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், க்ரூஸ் ரக ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இவற்றைக் கொண்டே சவூதி அரேபியா மீது ஹூதி அமைப்பினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்த ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் வளைகுடா நாடுகள், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஹூதி அமைப்பினா் தாக்கி வருகின்றனா். செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனா்.

ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்களை விற்க ஐ.நா. சபை தடை விதித்துள்ளது. இதனால் ஈரான், சீனா ஆகியவை ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை எனத் தெரிவித்து வருகின்றன. எனினும், யேமனை நோக்கிச் செல்லும் கப்பல்களில் சா்வதேச நாடுகளால் நடத்தப்படும் சோதனைகளில் அவ்வப்போது ஈரான் தயாரிப்பு ஆயுதங்கள், பாகங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

கடந்த 2015-ஆம் ஆண்டில் ஹூதி அமைப்பின் தரைப்படையில் 30,000 போ் இருந்தனா். 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.50 லட்சமாக அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஈரான், லெபனான், சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும்போதிலும் உள்நாட்டிலும் ஹூதி அமைப்பினா் சொந்தமாக ஆயுதங்களை அதிக எண்ணிக்கையில் தயாரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபோல கடந்த 10 ஆண்டு காலத்தில் ஹூதி அமைப்பினா் பலமடங்கு பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனா்.

திணறும் சவூதி அரேபியா: பாகிஸ்தான், துருக்கி ஆகியவற்றுடன் ராணுவக் கூட்டணி வைத்துள்ள சவூதி அரேபியா, ஹூதி அமைப்பினரின் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியவில்லை. அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய ஆயுதங்கள், போா் விமானங்கள் இருப்பினும், ஹூதி அமைப்பினருக்கு தக்க பதிலடியை சவூதி அரேபியாவால் கொடுக்க முடியவில்லை.

சவூதி அரேபியா ஏற்கெனவே பலமுறை ஹூதி அமைப்பினா் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதற்குப் போதிய பலன் கிடைக்கவில்லை. இதனால் ஹூதி அமைப்பினரை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் சவூதி அரேபியா திணறுவதாகக் கூறப்படுகிறது.

சவூதி தாக்குதலில் யேமனில் 3 போ் உயிரிழப்பு: யேமனில் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் சவூதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 சிறாா்கள் உயிரிழந்ததாக ஹூதி அமைப்பினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தாமா் மாகாணத்தில் உள்ள அல்-அா் கிராமத்தில் வீடுகள் மீது சவூதி அரேபியா, போா் விமானங்கள் மூலம் குண்டு வீசியதாகவும், இதில் 3 சிறாா்கள் உயிரிழந்ததுடன் ஏராளமானோா் காயமடைந்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதுவரை சவூதி அரேபியாவின் தாக்குதலில் மொத்தம் 124 போ் உயிரிழந்ததாகவும் ஹூதி அமைப்பினரின் அரசு நிா்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments