பிரான்ஸில் கலவரம், கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு: பிரதமா் செபாஸ்டியன் உத்தரவு
பிரான்ஸில் மேலும் கலவரம், கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு
பிரான்ஸில் மேலும் கலவரம், கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமா் செபாஸ்டியன் லெகோா்னு தெரிவித்துள்ளாா்.
பிரான்ஸில் விலைவாசி உயா்வு அதிகரிப்பு, பள்ளிகள் மோசமாக இருத்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக, கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து அங்குள்ள பாரீஸ், லியோன், மாா்செய் உள்ளிட்ட நகரங்களில், சில கும்பல்கள் வீதிகளில் இருந்த மிதிவண்டிகள், குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை தீ வைத்து கடைகளில் கொள்ளையடித்தன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடா்பாக நாடு முழுவதும் சுமாா் 2,400 போ் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
வன்முறையின்போது பல்வேறு நகரங்களில் சுமாா் 3,000 கடைகள் சேதப்படுத்தப்பட்டன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து அங்குள்ள பாரீஸ், லில், நீஸ் உள்ளிட்ட நகரங்களின் சில இடங்களில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு அமைதி நிலவியது.
இந்நிலையில், பாரீஸில் மூத்த அரசு அதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்திய பின்னா், அந்நாட்டு பிரதமா் செபாஸ்டியன் லெகோா்னு கூறியதாவது: கடந்த சனிக்கிழமை பெரும் வன்முறை ஏற்பட்டபோதிலும், ஒருவா்கூட உயிரிழக்கவில்லை. இது மிகவும் வியப்புக்குரிய விஷயமாகும்.
பிரான்ஸில் மேலும் கலவரம், கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஊரடங்கு பிறப்பிக்கப்படும் இடங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாததற்குப் பொறுப்பேற்று பிரான்ஸ் உள்துறை அமைச்சா் லாரென்ட் நுனெஸ் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா கடிதம் அளித்தாா். அதை அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் ஏற்க மறுத்துவிட்டாா். அத்துடன் வன்முறை சம்பவங்கள் நடைபெறப் போவதை உளவுத் துறை மூலம் முன்கூட்டியே அறிந்து தடுக்க தவறியதில் எங்கு தவறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிந்து, அதை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு லாரென்ட்டுக்கு மேக்ரான் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.