சூடானில் பஞ்ச அபாயம்: 31 நாடுகள் எச்சரிக்கை!
சூடானில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக கவலைக்கிடமான நிலை ஏற்பட்டுள்ளது.
சூடானில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக கவலைக்கிடமான நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை சரிசெய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு 31 நாடுகள் இணைந்து கையெழுத்திட்ட கூட்டறிக்கையை அமெரிக்கா வெளியுறவுத்துறை இன்று வெளியிட்டது.
சூடானில் ஆயுதப் படைகளுக்கும் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் 2023-ல் போர் வெடித்தது. இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 1.3 கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இது உலகின் மிகப்பெரிய பஞ்சம் மற்றும் இடம்பெயர்வு நெருக்கடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், ”சூடானில் அடுத்தடுத்த மாதங்களில் ஏற்படவிருக்கும் பஞ்ச அபாயத்திற்கு அவசர நடவடிக்கை தேவை. உயிர்களைக் காப்பாற்றவும் பஞ்சத்தைத் தடுக்கவும் இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது.
இந்தப் போக்கை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கணிக்கப்பட்ட 8.25 லட்சத்தைத் தாண்டக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர், கிட்டத்தட்ட 1.95 கோடி மக்கள் கடுமையான உணவுப் போதாமையை எதிர்கொள்வதாகவும், அவர்களில் 5 லட்சம் பேர் அவசர நிலையைச் சந்திப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் கையொப்பமிட்ட 31 நாடுகளும், மனிதாபிமான உதவிகளுக்கான அனைத்துத் தடைகளையும் நீக்குமாறு போரில் ஈடுபடும் தரப்பிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் முழுமையான, பாதுகாப்பான, விரைவான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகளை அனுமதித்து எளிதாக்கி, மனிதாபிமானப் பணியாளர்களைப் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிக்கையில், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, லாட்வியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
The ongoing conflicts in Sudan have led to a concerning situation regarding food security.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.