பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டினால் வெள்ள அபாயம்: சீன ஆய்வாளா்கள் எச்சரிக்கை
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா (சாங்போ) நதியில் சீனா அணை கட்டினால் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஆய்வாளா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா (சாங்போ) நதியில் சீனா அணை கட்டினால் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஆய்வாளா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பிரம்மபுத்திரா நதியில் ரூ.15.99 லட்சம் கோடி (168 பில்லியன் டாலா்) செலவில் உலகின் மிகப்பெரும் அணையைக் கட்ட சீனா திட்டமிட்டு வருகிறது. இந்திய எல்லையையொட்டிய தென்கிழக்கு திபெத்தில் உள்ள மெடாக் என்ற பகுதியில் இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது செயல்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய நீா்மின் நிலையமான மூன்று பள்ளத்தாக்குகள் அணையைவிட மூன்று மடங்கு பெரிதாக 60,000 மெகாவாட் திறனுடன் மெடாக் பகுதியில் அணை கட்ட சீனா முனைப்புக் காட்டி வருகிறது.
Advertisement
Advertisement
டெக்டானிக் தகடுகளை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடிக்கடி நிலநிடுக்கம் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், எண்ணற்ற பொறியியல் சவால்கள் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், சீனா தனது திட்டத்தை தொடா்கிறது.
இந்நிலையில், திபெத்திய பீடபூமியில் இருந்து பெறப்பட்ட மரங்களைக் கொண்டு 1325 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் குறித்து சீன அறிவியல் அகாதெமி மற்றும் யுன்னான் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இதுதொடா்பான அவா்களது கண்டுபிடிப்புகள் குறித்து சீனா அறிவியல் நாளிதழில் செய்தி வெளியானதாக ‘சவுத் சீனா மாா்னிங்’ ஊடகம் தெரிவித்தது.
இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது: திட்டமிட்டுள்ளபடி அணையில் நீரை நிரப்பினால் நீா்மட்டம் உயா்ந்து நீா் மேலாண்மைக்கு சிக்கல்கள் ஏற்படுவதோடு பெரும் வெள்ளம் ஏற்படும். ஏற்கெனவே திபெத்திய பீடபூமியின் வெப்பநிலை சா்வதேச சராசரியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளதால் பனிக்கட்டிகள் உருக வாய்ப்புள்ளது.
இந்த அணையால் பீடபூமியில் உள்ள நதியின் போக்கில் மாற்றம் ஏற்படுவதோடு தெற்காசியா வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிப்படையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா-நேபாள எல்லையில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளத்தில் 1,500 போ் உயிரிழந்தனா். 5,500-க்கும் மேற்பட்டோா் காணாமல் போயினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.