கர்நாடகத்தில் நானோ தொழில்நுட்ப முதலீடுகளில் ஈடுபட சலுகைகள்: அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல்
கர்நாடகத்தில் நானோ தொழில்நுட்ப முதலீடுகளில் ஈடுபட சலுகைகள் அளிக்கப்படும் என்றுதகவல் மற்றும் உயிரிதொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் நானோ தொழில்நுட்ப முதலீடுகளில் ஈடுபட சலுகைகள் அளிக்கப்படும் என்றுதகவல் மற்றும் உயிரிதொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூருவில் வியாழக்கிழமை பெங்களூரு இந்தியா நானோ-2016 கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடக்கிவைத்து அவர் பேசியது: நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்காக கடந்த 8 ஆண்டுகளாக பெங்களூருவில் நானோ தொழில்நுட்ப கண்காட்சிமற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதிகளவில் கலந்துகொள்வது இந்த கண்காட்சியின் உலக அளவிலான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. விவசாயம், தொழில்நுட்ப உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், உயிரிதொழில்நுட்பம், மின்னணு, தகவல், சுகாதாரம், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல், விண்வெளி, மின்னாற்றல், சுற்றுச்சூழல், பொருள் அறிவியல், ராணுவம் உள்ளிட்டபல்வேறு துறைகளில் நானோதொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது. நானோ காலம் மலர்ந்துள்ளதால், உலக வாழ்க்கை தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது. நானோ தொழில்நுட்ப பயன்பாடுகளின் எல்லை விரிவடைந்தவண்ணம் உள்ளது.
அறிவியல் வளர்ச்சியில் பெங்களூருவின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்ததாகும். இந்தியாவின் முன்னணி அறிவியல் மையங்கள் பெங்களூருவில் நிலைபெற்றுள்ளதும், அறிவியல் வளர்ச்சிக்கு ஊக்கமளித்துவந்துள்ளது. மாநிலத்தில் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுக்க பாரதரத்னா சி.என்.ஆர்.ராவ் தலைமையில் தொலைநோக்குக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பெங்களூரு மாநகரை நானோதொழில்நுட்பத்தின் கோட்டையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நானா அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பெங்களூருவில் நானோ மற்றும் மென்மைபொருள் அறிவியல் மையத்தை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நானோதொழில்நுட்பத்தில் தொழில்முதலீடுகளுக்குதகுந்த சூழல் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நானோதொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் இங்கு அதிகளவிலானவாய்ப்புகள் குவிந்துள்ளன. கர்நாடகத்தில் நானோதொழில்நுட்ப முதலீடுகளில் ஈடுபட சலுகைகள் அளிக்கப்படுவதால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு நானோதொழில்நுட்ப அறிவியல் அறிஞர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்களை அழைக்கிறேன்.
கர்நாடக அரசு அண்மையில் வளர்தொழிலக கொள்கை-2015-2020- அறிவித்துள்ளது. பெங்களூருவில் ஏற்கெனவே 4 ஆயிரம் வளர்தொழிலகங்கள் உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 2 ஆயிரம் வளர்தொழிலகங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.