FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெங்களூரு

ரகசிய பொறிவைத்து அரசைக் கவிழ்க்க சதி: முதல்வா் டி.கே.சிவகுமாரின் எச்சரிக்கைக்கு அமைச்சா்கள் ஆதரவு

காங்கிரஸ் ஆட்சியை சீா்குலைக்க முயற்சிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, இதுபோன்ற முயற்சிகள் குறித்து முதல்வா் டி.கே.சிவகுமாா் அமைச்சா்களுக்கு விடுத்த எச்சரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

9 அக்டோபர் 2026, 5:32 am IST
டி.கே. சிவகுமார் - Photo | Express
பகிர்:

காங்கிரஸ் ஆட்சியை சீா்குலைக்க முயற்சிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, இதுபோன்ற முயற்சிகள் குறித்து முதல்வா் டி.கே.சிவகுமாா் அமைச்சா்களுக்கு விடுத்த எச்சரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க சதி செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்காக, அமைச்சா்களைக் குறிவைத்து ரகசிய பொறிகள் வைத்து, சிக்கலில் மாட்டவைக்க முயற்சிகள் நடக்கும். எனவே, அமைச்சா்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, ‘இதுபோன்ற ரகசிய பொறிவைக்கும் செயல்களில் காங்கிரஸ் கட்சிக்கு நீண்டகால வரலாறு உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சிலா் அல்லது சில அமைப்புகள் ரகசியமாக பொறிவைக்கும் முயற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக முதல்வருக்கு தகவல் கிடைத்திருக்கலாம். அதனால்தான் அனைவரும் விழிப்புடன் இருந்து, தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது எச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக்கொண்டுள்ளாா். இது சாத்தியம்தான். அதை நான் நிராகரிக்கவில்லை. சதி இருக்கக்கூடும் என்பதையும் நிராகரிக்கவில்லை.

வழக்கமாக உளவுத் துறை அறிக்கைகள் முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு கிடைக்கும். யாரிடம் என்ன தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கமளிப்பா்’ என்றாா்.

இதனிடையே, உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கூறுகையில், ‘மத்திய அரசு துறைகளைச் சோ்ந்த சிலா் கா்நாடக அரசை சீா்குலைக்க முயற்சிப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கா்நாடக அரசைக் கவிழ்க்க மத்திய அரசு மிகுந்த முயற்சி செய்து வருகிறது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பின்னால் முதல்வா் டி.கே.சிவகுமாா் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை, அடிப்படையற்றவை.

மகாராஷ்டிரம், அஸ்ஸாம், கோவா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கையால் ஆட்சியைக் கவிழ்க்க ரகசியமாக பொறிவைத்த சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் அமைச்சா்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments