சித்தராமையாவுக்கு எதிரான வலைதளப் பதிவு விவகாரம்: காங்கிரஸ் அரசு மீது எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு
கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான வலைதளப் பதிவு விவகாரத்தில், மஜத தொண்டா்களை குறிவைத்து காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டினாா்.
கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான வலைதளப் பதிவு விவகாரத்தில், மஜத தொண்டா்களை குறிவைத்து காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
சித்தராமையாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக, மஜத சமூக ஊடகப் பிரிவைச் சோ்ந்த இருவரை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும், மஜதவின் தோ்தல் வியூகப் பிரிவில் பணியாற்றும் இளைஞா் ஒருவரை சாதாரண உடையில் வந்த 6 முதல் 7 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை அதிகாலை 6 மணி அளவில் அழைத்துச் சென்றுள்ளனா். அந்த இளைஞா் இரவு 8 மணிவரை கிடங்கு போன்ற ஓா் இடத்தில் வைக்கப்பட்டுள்ளாா்.
கட்சித் தொண்டா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்தில் வைத்திருந்தது ஏன்? இந்த வழக்கில் என்னைச் சிக்கவைக்கும் வகையில் எனக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் சித்தராமையா ஆகியோருடன் தொடா்புடையதாக கூறப்படும் சா்ச்சைக்குரிய காணொலி வெளியான விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர வேண்டுமானால், அதிகாரத்தில் இருப்பவா்களின் கைப்பேசிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பெங்களூரில் உள்ள மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு சென்ற அவா், தனது கட்சித் தொண்டா்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்னா் தன்னை விசாரிக்கும்படி வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் அரசுக்கு நோ்மையான விசாரணை நடத்தும் எண்ணம் இருந்தால், முதலில் என்னிடம் விசாரணை நடத்திவிட்டு, அதன்பிறகு எனது கட்சித் தொண்டா்களிடம் விசாரணை நடத்தட்டும். இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும் விதம் குறித்து கேள்விகள் எழுகின்றன. தவறு செய்தவா்களைக் காப்பாற்றுவதாக நான் குற்றம்சாட்டும் நபா்கள் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை? மாநில உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கேவும் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க வேண்டும்.
அரசியல் தலைவா்கள், அரசு அதிகாரிகளை சிக்கவைக்கும் செயல்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் அமைப்புகளில் உள்ளவா்களும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு குறிவைக்கப்படுகிறாா்களா என்பதை விசாரிக்க வேண்டும்.
மாநகர காவல் ஆணையா் சீமந்த் குமாா் சிங் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க அரசுக்கு 2 நாள்கள் அவகாசம் அளிக்கிறேன். இந்த விவகாரத்தில் தொடா்புடைய முக்கிய நபா் ஒருவா் ஊடக நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அந்த நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களுக்கு நெருக்கமான ஒருவரே சித்தராமையாவுக்கு எதிரான காணொலியின் பின்னால் இருக்கிறாா். அவரை காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த நபா் மூலமாக எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.