காங்கிரஸ் ஒத்துழைத்தால் நிலையான ஆட்சியை வழங்க முடியும்: முதல்வர் குமாரசாமி
காங்கிரஸ் ஒத்துழைத்தால் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
காங்கிரஸ் ஒத்துழைத்தால் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
தும்கூரில் வியாழக்கிழமை சித்தகங்கா பீடத்தின் மடாதிபதி சிவக்குமார சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்ற பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தவிர்க்க முடியாத சூழலில் நான் முதல்வராகப் பதவியேற்றுள்ளேன். 2006-இல் முதல்வராகப் பதவியேற்று 20 மாதங்கள் ஆட்சிபுரிந்தேன். அப்போது, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினேன். அதன்மூலம் அழிவில் இருந்த எனது கட்சியைக் காப்பாற்றினேன். தற்போது எனது தன்மதிப்புக்காக முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆசை எனக்கில்லை.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முன்னரே எடியூரப்பாவை போல அவசரகதியில் முக்கிய முடிவுகளை எடுக்க நான் விரும்பவில்லை. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபிறகு, ஆட்சி நடத்துவேன். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகே அனைத்து சந்தேகங்களுக்கும் என்னால் பதிலளிக்க இயலும்.
என்னை முதல்வராக்க சித்தராமையா தடையேற்படுத்தியதாக எனது தாயார் சென்னம்மா தேர்தலுக்கு முன்பு கூறியது தற்போது பொருத்தமற்றதாகும். எனது தாய் அரசியலில் இல்லை. எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அப்போது அப்படி கூறியிருந்தார். அதற்கு தற்போது முக்கியத்துவம் எதுவுமில்லை.
கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்களை தோண்டியெடுத்து விசாரித்து எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை.மாறாக, அரசின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன்.
குழந்தைகளை திருடியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை சாமராஜ்பேட்டில் சிலர் கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும். குழந்தை கடத்தல் அல்லது திருட்டு நடப்பதாக ஒருசிலர் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். இதற்கு மக்கள் செவிசாய்க்கக் கூடாது. அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த போது காவல்துறையினர் அவரை விதான செளதாவுக்குள் அனுமதிக்காமல் அவமதித்த நிகழ்வு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். இதுகுறித்து காவல் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளேன். மேலும், இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளேன் என்றார்.
அப்போது மஜத மூத்த தலைவர்கள் பசவராஜ் ஹோரட்டி, ரேவண்ணா சித்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மடாதிபதிகளைச் சந்தித்துஆசி பெற்ற முதல்வர்
முதல்வர் குமாரசாமி வியாழக்கிழமை குருகுந்த பிரம்மேஸ்வர, ஆதிசுன்சுனகிரி, சித்தகங்கா மடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.
கர்நாடகத்தின் புதிய முதல்வராக மஜதவைச் சேர்ந்த எச்.டி.குமாரசாமி புதன்கிழமை பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பட்டனநாயனகஹள்ளியில் உள்ள குருகுந்த பிரம்மேஸ்வர மடத்துக்குச் சென்று மடாதிபதி நஞ்சவதூத சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெற்றார்.
மேலும், பெங்களூரு விஜயநகரில் உள்ள ஆதிசுன்சுனகிரி மடத்துக்குச் சென்று, மடாதிபதி நிர்மலானந்த சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெற்றார். பின்னர், தும்கூரு சித்தகங்கா மடத்துக்குச் சென்று மடாதிபதி சிவக்குமார சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அதைத் தொடர்ந்து இளைய மடாதிபதி சித்தலிங்கா சுவாமிகளிடம் குமாரசாமி ஆசி பெற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.