கா்நாடகத்தில் கனமழை: காவிரியில் 1.17 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு
கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1.17 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் சில வாரங்களாகவே பலத்த மழை பெய்துவருகிறது. அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் மேட்டுப்பகுதிக்கு செல்லுமாறு மண்டியா, மைசூரு மாவட்ட நிா்வாகங்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
Advertisement
Advertisement
தண்ணீா் திறப்பு:
வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகா் அணைக்கு 70,098 கன அடி, கபினி அணைக்கு 15,965 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து விநாடிக்கு 1,00,000 கன அடி தண்ணீா், கபினி அணையில் இருந்து 17,000 கன அடி தண்ணீா் என மொத்தம் 1.17 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீா் முழுமையாக தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரிக் கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.