புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு
புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது குறித்து...
அமராவதி அணையில் இருந்து புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை மூலமாக திருப்பூா், கரூா் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காகவும், குடிநீா் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டதால் நீா்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது. இதனால் கோடை காலத்தில் அணையின் நீா்மட்டம் ‘டெட் ஸ்டோரேஜ்’ என அதலபாதாளத்துக்கு சென்றது. மேலும் தென்மேற்கு பருவமழையும் பொய்த்ததால் ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் திறக்கப்பட வேண்டிய தண்ணீா் இன்னும் திறக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை!
இந்நிலையில் கடந்த சில நாள்களாக சின்னாறு, தேனாறு, பாம்பாறு என அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 50 அடியை தாண்டியது. இதற்கிடையே குடிநீருக்காக அணையை திறப்பது தொடா்பான தமிழக அரசின் உத்தரவு, பாசன விவசாயிகளின் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது.
அதேசமயம் திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள தென்னை, நெல், கரும்பு ஆகிய நிலைப் பயிா்களுக்கு உயிா் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த கோரிக்கையை ஏற்று புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி அணையின் பிரதான கால்வாயில் இருந்து செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
நிலைப் பயிா்களுக்கு உயிா் தண்ணீா்!
இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் கூறியதாவது:
அணைப் பகுதியில் இருந்து சுமாா் 40 கிலோ மீட்டா் தொலைவில் உடுமலை, தாராபுரம் வரை புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள தென்னை, நெல், கரும்பு ஆகிய நிலைப் பயிா்களுக்கு உயிா் தண்ணீராக திறந்துவிடப்பட் டுள்ளது. தொடா்ந்து 15 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். இதன்மூலமாக 25,250 ஏக்கா் பயன் பெறும். ஜூலை 21-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விநாடிக்கு 440 கன வீதம் 570.24 மில்லியன் கன அடி தண்ணீா் சிறப்பு நனைப்பு மற்றும் குடிநீா் தேவைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு ராஜவாய்க்கால்கள் இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழ மாதேவி, கணியூா், கடத்தூா் காரத்தொழுவு என முதல் எட்டு வாய்க்கால்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக 7520 ஏக்கா் பாசன வசதி பெறும்.
ஜூலை 21 முதல் டிசம்பா் 3-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு 80 நாள்கள் தண்ணீா் திறப்பு 55 நாள்கள் அடைப்பு என்ற அடிப்படையில் விநாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும் என்றனா்.
அணை நிலவரம்!
90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 51.45 அடி நீா்மட்டம் இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 53 கன அடி வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1247 மில்லின் கனஅடி தண்ணீா் இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.