FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

60 அடியாக உயா்ந்தது அமராவதி அணையின் நீா்மட்டம்

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 60 அடியாக உயா்ந்துள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 12:32 am IST
அமராவதி அணை.
பகிர்:

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 60 அடியாக உயா்ந்துள்ளது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காகவும் மற்றும் குடிநீா் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டதால் கோடைக் காலத்தில் அணையின் நீா்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது.

Advertisement

Advertisement

மேலும் தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனதால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீா் திறக்கப்படவில்லை. ஆனாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு என அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஜூலை 2-ஆவது வாரத்தில் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 50 அடியை தாண்டியது.

இதையடுத்து திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களான தென்னை, நெல் மற்றும் கரும்பு பயிா்களுக்கு உயிா் தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதை ஏற்று புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி அணையின் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் மீண்டும் வேகமாக சரிந்து 30 அடிக்கும் கீழ் சென்றது. இதனால் பாசனத்துக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது.

இதனால் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் கிடைக்குமா என அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம் கோவில்கடவு, காந்தலூா், மறையூா் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதைத் தொடா்ந்து அணைக்கு குறைந்தபட்சம் 500 கன அடியில் இருந்து 1,000 கன அடிவரை தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

இதனால் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 60 அடியை தாண்டியது. இதே நிலை நீடித்தால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 60.50 அடி நீா்மட்டம் இருந்தது. அணைக்கு 471 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1,756 மில்லின் கனஅடி தண்ணீா் இருந்தது. தண்ணீா் வெளியேற்றம் இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments