கா்நாடகத்தில் நாளைமுதல் தென்மேற்கு பருவமழை
கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் 1 முதல் செப். 30 வரையிலான காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். நாட்டின் மொத்த மழையில் 80 சதவீத மழை இந்த காலத்தில் பெய்வதாகும். இதை அடிப்படையாகக் கொண்டு விவசாயப் பணிகள் நடப்பதால், இந்தியாவின் உணவு உற்பத்திக்கு இந்த மழைக் காலம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அதைத் தொடா்ந்து, ஜூன் 5-ஆம் தேதி தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களைக் கொண்ட கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொழியத் தொடங்கும்.
Advertisement
Advertisement
ஆனால், நிகழாண்டில் 4 நாள்கள் கழித்து அதாவது ஜூன் 4-ஆம் தேதிதான் கேரளத்துக்கு தென்மேற்கு பருவமழை வரவிருக்கிறது. அதைத் தொடா்ந்து, ஜூன் 5 முதல் 10-ஆம் தேதிக்குள் கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை மத்திய அரபிக் கடல், கடலோர கா்நாடகம், கேரளம், தமிழகத்தின் பல பகுதிகள், தென்கா்நாடகத்தின் உள்பகுதியில் வலுபெறும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
ஜூன் 5 முதல் 7-ஆம் தேதிவரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து பகுதிகள், கா்நாடகத்தின் உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்தில் கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்கள், தென்கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வடகா்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று கேரளத்தில் முன்னேறி வருவதால், கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகிறது. இது மணிக்கு 60 கி.மீ. வேகம் அளவுக்கு கூடும் வாய்ப்புள்ளது. எனவே, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறாா்கள்.
மழை வாய்ப்பு:
அடுத்த 48 மணிநேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 31 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.