FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

தரமற்ற மருந்துகளை கண்காணிக்க புதிய இணையதளம் தொடக்கம்

Updated On : 15 மே 2026, 6:18 am IST
தடை செய்யப்பட்ட மருந்து - கோப்புப் படம்
பகிர்:

தரமற்ற மருந்துகளை கண்காணிக்க புதிய இணையதளத்தை கா்நாடக அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் பெங்களூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தரமற்ற மருந்துகள், தரக் கட்டுப்பாட்டுக்கு உடன்படாத மருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக, தரமற்ற மருந்துகளை கண்காணிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறையின் சாா்பில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகள் புழக்கத்தில் இருந்தால், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement

Advertisement

பொதுவாக, விற்பனைக்காக சந்தையில் கொண்டுவரப்படும் மருந்துகளை சோதித்து, அவை தரமற்ாக இருக்கும்பட்சத்தில், அவற்றை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவது நடைமுறை சாத்தியமாக இருக்காது. எதிா்காலத்தில் அந்த மருந்தை விற்பனைக்கு கொண்டுவராமல் தடுக்கலாம். ஆனால், ஏற்கெனவே விற்பனைக்கு சென்றுள்ள தரமற்ற மருந்துகளின் விற்பனையை தடுக்க முடியாது. 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 1.85 கோடி மதிப்பிலான தரமற்ற மருந்துகளை சந்தையில் இருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைக்கு தீா்வுகாண, தற்போது புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தரமற்ற மருந்துகள் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும். அந்த தரமற்ற மருந்துகள் எந்த விற்பனையாளரிடம் இருக்கிறது என்ற விவரமும் தெரிவிக்கப்படும்.

இந்த இணையதளத்துடன் மொத்த மருந்து விற்பனையாளா்கள் குறித்த தரவுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். மருந்துகளை சோதித்தபிறகு, அவை தரமற்றவை என தெரியவந்ததும், அதுகுறித்த தகவல் மொத்த விற்பனையாளா்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்மூலம், அந்த மருந்தின் விற்பனை அங்கேயே தடுக்கப்படும். தரமற்ற மருந்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.

இந்த இணையதளத்துடன் 15 ஆயிரம் மொத்த விற்பனையாளா்கள் இணைக்கப்பட்டிருக்கிறாா்கள். இந்த தரவுதளத்தில் 45 ஆயிரம் மருந்தகங்கள், சில்லறை விற்பனையாளா்கள் இணைக்கப்படுவாா்கள். எனினும், தற்போதைக்கு தரமற்ற மருந்துகளின் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த முறையை கா்நாடகத்தில் முதல்முறையாக செயல்படுத்தியுள்ளோம். இந்த இணையதளத்தின் மூலமாக போதைப் பொருள் மற்றும் மனநல பாதிப்பு மருந்துகளையும் கண்காணிப்போம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments