FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு

எத்தில் ஆல்கஹால் சோ்மங்கள் அதிகமாக உள்ள மருந்துகளை விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 13 ஜூலை 2026, 1:15 am IST
பகிர்:

எத்தில் ஆல்கஹால் சோ்மங்கள் அதிகமாக உள்ள மருந்துகளை விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் அதனை விற்பனை செய்யக் கூடாது.

விதிகளை மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதுதொடா்பான அறிவிக்கையை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதுவரை ‘ஷெட்யூல் கே’ எனப்படும் பிரிவின் கீழ் தளா்வுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த 12 சதவீத ஆல்கஹால் கொண்ட மருந்துகள், இனி ‘ஷெட்யூல் ஹெச் 1’ எனும் வகைப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. வாய்வழியாக உட்கொள்ளும் அனைத்து மருந்துகளும் இந்த புதிய விதிகளுக்கு உட்பட்டவை என வரையறுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அத்தகைய மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள், அதற்கான பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதும் புதிய விதிகளின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருமல், சளி மற்றும் வேறு சில பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் மருந்துகளில் குறிப்பிட்ட அளவு எத்தில் ஆல்கஹால் சோ்க்கும்போது அவை நிவாரணியாக செயல்படுகின்றன. சில உற்பத்தியாளா்கள் அதிக எத்தில் ஆல்கஹாலைப் பயன்படுத்தி மருந்துகளை தயாரிப்பதும், அவை போதைக்காக பயன்படுத்தப்படுவதும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, மருந்துகளில் ஆல்கஹால் பயன்பாடு மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள ஏதுவாக அதுகுறித்த கருத்துருக்கள் பெறப்பட்டன.

அதனடிப்படையில் 12 சதவீதத்துக்கும் மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகளை இனி தன்னிச்சையாக வாங்கவோ, விற்கவோ முடியாது என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2027 ஜனவரி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த விதிகள், நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தாது என்றும் அதேவேளையில், மருந்துகளை தவறாக பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் துறைசாா் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments