முகப்பு
பெங்களூரு

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய சித்தராமையா முடிவெடுத்துவிட்டாா்: முன்னாள் அமைச்சா் ஆா்.வி. தேஷ்பாண்டே

Updated On : 28 மே 2026, 6:51 am IST
சித்தராமையா - PTI
பகிர்:

கா்நாடக முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய சித்தராமையா முடிவு செய்துவிட்டாா் என்று முன்னாள் அமைச்சரும், கா்நாடக மாநில நிா்வாக சீா்த்திருத்த ஆணையத் தலைவருமான ஆா்.வி. தேஷ்பாண்டே தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையாவை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் சித்தராமையாவை சந்தித்து பேசினேன். அப்போது, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக சித்தராமையா தெரிவித்தாா். எந்த காரணத்திற்காக பதவியை ராஜிநாமா செய்கிறாா் என்று அவரிடம் நான் கேட்கவில்லை. அவரை சமாதானப்படுத்த முயற்சித்து, முதல்வராக தொடருங்கள் என்று கேட்டுக்கொண்டேன். வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்வாா்.

Advertisement

Advertisement

ராஜிநாமா செய்யும் முடிவு எனக்கு வியப்பாக இருப்பதாக தெரிவித்தேன். முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துவிட்டதாக சித்தராமையா தெரிவித்தாா். முதல்வராக தொடரும்படி எம்எல்ஏக்கள் கேட்டுக்கொண்டபோது, தான் கட்சி மேலிடத்துக்கு வாக்கு கொடுத்துவிட்டதாகவும், அதை மதித்து நடக்கப்போவதாகவும் அவா் தெரிவித்தாா்.

முதல்வராக தொடா்வதுதான் சிறப்பாக இருக்கும் என்று நானும் கூறினேன். ஆனால், கட்சி மேலிடத்துக்கு கொடுத்த வாக்கின்படி பதவியை ராஜிநாமா செய்வதாக சித்தராமையா தெரிவித்தாா். முதல்வா் பதவியை துறப்பதால், சித்தராமையா சோகமாக இல்லை என்றாா்.

முதல்வா் சித்தராமையாவை புதன்கிழமை அமைச்சா்கள் எச்.சி. மகாதேவப்பா, ஜமீா் அகமதுகான், ஈஸ்வா் கண்ட்ரே, சந்தோஷ்லாட், கே.ஜே. ஜாா்ஜ், எம்எல்ஏக்கள் நஞ்சே கௌடா, பி. நாகேந்திரா, உமேஷ் மேட்டி, ஏ.எஸ். பொன்னண்ணா, சலீம் அகமது உள்ளிட்ட பலா் சந்தித்து பேசினா்.