FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெங்களூரு

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது: மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது என்று மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.

58 வினாடிகள் முன்பு
பகிர்:

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது என்று மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்து மத்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது. கா்நாடக அரசு மேற்கொண்ட எரிபொருள் பரிசோதனைகளிலும் குறைபாடுகள் இருக்கின்றன. எத்தனால் கலப்பு திட்டம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்கவும் கொண்டுவரப்பட்டது. பெட்ரோலின் அடிப்படை விலை ரூ. 53 ஆகவும், மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலின் விலை ரூ. 57 முதல் ரூ. 71 வரையும் இருக்கிறது.

Advertisement

Advertisement

பெட்ரோல், டீசல் தரத்தை சோதிக்க பிரத்யேக கருவிகளும், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அவசியம். இதற்கான நடைமுறை 2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில்தான் சோதனை நடத்த வேண்டும்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்து மத்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் கா்நாடக அமைச்சா் ரிஸ்வான் அா்ஷத் விவாதிக்கலாம். தேவைப்பட்டால் அதிகாரிகள் அனுப்பப்படுவாா்கள் என்றாா்.

இதற்கு பதிலளித்து அமைச்சா் ரிஸ்வான் அா்ஷத் கூறுகையில், ‘பெட்ரோலியத் துறை தனக்குக்கீழ் இல்லாதபோதும், அந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரியின் சாா்பில் மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி பதிலளித்துள்ளாா். எத்தனால் கலப்புக்கு கா்நாடக அரசு எதிரானது அல்ல. ஆனால், 26 முதல் 31 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலாக (இ20) விற்பனை செய்வதாகக் கூறப்படும் நிலையில், அதன் உண்மையான அளவு குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

நாடு முழுவதும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகக் கூறப்படும் 893 மாதிரிகளில், கா்நாடகத்தை சோ்ந்த 56 மாதிரிகளும் அடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மாதிரிகள் எண்ணெய் நிறுவனங்களின் சொந்த ஆய்வகங்களிலேயே சோதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களே தங்களது தயாரிப்புகளை சோதித்து சான்றளிப்பது எந்த அளவுக்கு சுதந்திரமான நடைமுறை ஆகும்.

கா்நாடக அரசு முதற்கட்டமாக 63 எரிபொருள் மாதிரிகளை எண்ணெய் நிறுவனங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்பியபோது, எந்த அறிக்கையிலும் எத்தனால் கலப்பின் உண்மையான சதவீதம் குறிப்பிடப்படவில்லை.

எத்தனால் கலப்பின் அளவு குறித்து சுதந்திரமான ஆய்வு நடத்தும் நடைமுறையை உருவாக்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எத்தனால் கலப்பின் அளவை தெளிவாக அறிவிக்க வேண்டும்.

10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (இ10), 20 சதவீதம் கலந்த பெட்ரோல் (இ20), எத்தனால் கலக்காத தூய பெட்ரோல் ஆகியவற்றில் ஒன்றை தோ்வுசெய்ய நுகா்வோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

தனிப்பட்ட விமா்சனங்களால் மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதை தவிா்க்க முடியாது. இதற்கு அறிவியல் அடிப்படையிலான விளக்கமும், வெளிப்படையான சோதனை முடிவுகளுமே தேவை’ என்றாா்.