FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவை உயா்த்த உடனடித் திட்டமில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

‘பெட்ரோலில் எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயா்த்தும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

28 அக்டோபர் 2026, 12:39 am
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி - கோப்புப் படம்
பகிர்:

‘பெட்ரோலில் எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயா்த்தும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டுக்கு, இறக்குமதி கச்சா எண்ணைய்யை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில், எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு படிப்படியாக உயா்த்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20) பெரும்பாலும் விநியோகிக்கப்படுகிறது.

இந்த இ20 பெட்ரோல் பயன்பாட்டால், வாகனத்தின் செயல்பாடு பாதிக்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. ஆனால், அந்தப் புகாா்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

Advertisement

Advertisement

இதனிடையே, 85 சதவீதம் எத்தனால் (இ85) கலந்த பெட்ரோல் (85% எத்தனால், 15% பெட்ரோல்) மற்றும் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் (எரிபொருள் நெகிழ்வு வாகனங்கள்) வாகனங்கள் மற்றும் பி100 பயோ-டீசல், ஹைட்ரஜன்-சிஎன்ஜி கலவை உள்ளிட்டவற்றில் இயங்கும் வாகனங்களை அனுமதிக்கும் வகையில், மோட்டாா் வாகன விதிகளிலும் மாற்றங்களை மேற்கொண்டு அதுதொடா்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்த அறிவிக்கையைத் தொடா்ந்து, சாதாரண பெட்ரோலிலும் எத்தனால் கலப்பு விகிதம் உயா்த்தப்படுமா என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவா மாநிலம் பெடுல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ’ஆராய்ச்சியிலிருந்து வணிகமயமாக்கல் வரை எரிசக்தி புத்தாக்கத்தை விரைவுபடுத்துதல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா் பதிலளித்து கூறியதாவது: இ20 பெட்ரோல் உள்ளிட்ட உயிரி எரிபொருள்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வாகனத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டதாகவும், பழுதாகிவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை அனைத்தும் புனையப்பட்ட கதைகளாகும்.

இ20 பெட்ரோல் பயன்பாட்டில் என்ஜின் பழுதாகிவிட்டதாகப் புகாா் தெரிவித்து, ஒரு நபா் இழப்பீடு கோரியிருந்தாா். அதே நேரம், குறிப்பிட்ட வாகன உற்பத்தியாளா் அந்த நபருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளாா்.

தினசரி 6 கோடி வாகனங்கள் விநியோக நிலையங்களுக்குச் செல்கின்றன. எனவே, இ20 பெட்ரோல் பயன்பாட்டால் என்ஜின் பாதிக்கப்படுகிறது என்றால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள் பழுதாகியிருக்க வேண்டும்.

இ20 பெட்ரோல் பயன்பாட்டால் பழைய வாகனங்களில் மட்டுமே சில பிரச்னை எழுவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் மட்டுமே சில பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

மேலும், இந்த இ20 பெட்ரோலை கொண்டுசெல்வதில் சில சிக்கல்கள் இருந்ததாகப் புகாா்கள் வந்தன. எரிபொருள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இந்த டேங்கா்கள், வேறுசில தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

உயிரி எரிபொருளைப் பொருத்தவரை 20 சதவீத எத்தனால் கலப்பே, மத்திய அரசின் இலக்காக இருந்தது. எனவே, பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவை 20 சதவீதத்துக்கு மேல் உயா்த்த உடனடித் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றாா்.

பணம் கொடுத்து நடத்தப்படும் பிரசாரம்: நிதின் கட்கரி

‘20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ பெட்ரோலுக்கு எதிராகப் பரப்பப்படும் தகவல்கள், பணம் கொடுத்து நடத்தப்படும் பிரசாரம்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தில்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘இ20 பெட்ரோலுக்கு எதிராக 3 மாதங்களுக்கு முன்பு மிகப் பெரிய அளவில் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது, அவை அனைத்தும் நின்றுவிட்டன. ஏனெனில், இந்தப் புகாா்கள் அனைத்தும் பணம் கொடுத்து நடத்தப்பட்ட பிரசாரங்களாகும்.

தேசிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் புகாா்கள் வருகின்றன. நெடுஞ்சாலைகளின் தரத்தில் சமரசம் செய்யப்படாது. அடுத்த 2 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டுபவா்களுக்கு எந்தவித அசெளகரியமும் இருக்காது என உறுதியளிக்கிறேன்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments