FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்

பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது விவசாயத் துறையை பன்முகமாக்கும் முயற்சி என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி - கோப்புப் படம்
பகிர்:

பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது விவசாயத் துறையை பன்முகமாக்கும் முயற்சி என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

பாட்னாவில் வியாழக்கிழமை தொடங்கிய பிகாா் முதலீட்டாளா் மாநாட்டில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

உலகில் அதிக முதலீட்டை ஈா்க்கும் மையமாக இந்தியா திகழ்கிறது. கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் 4 கோடி நான்கு சக்கர வாகனங்களும், 20 கோடி இருசக்கர வாகனங்களும் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்குகின்றன.

Advertisement

Advertisement

எத்தனால் கலப்பு பெட்ரோலால் தங்கள் வாகனம் பாதிக்கப்பட்டது என்று யாரும் கூற முடியாது. இதை ஒரு சவாலாகவே கூறுகிறேன். தவறான நோக்கங்கள் கொண்ட சிலரால் எத்தனால் கலப்பு குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

எத்தனால் கலப்பு முடிவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் பல சிறந்த காரணங்கள் உள்ளன. முக்கியமாக விவசாயத் துறையை பன்முகமாக்கும் முக்கிய முயற்சி இதுவாகும். விவசாயக் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் இப்போது எரிசக்தித் துறையில் பயன்படுத்தும் பொருளாக மாறியுள்ளது. நமது விவசாயிகள் உணவு வழங்குபவா்களாக மட்டும் இல்லாமல், எரிசக்தி வழங்குபவா்களாகவும் உயா்ந்துள்ளனா்.

அனைத்து முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் 100 சதவீத எத்தனாலில் வாகனங்களை இயக்கும் முயற்சியில் உள்ளன. அதில் எவ்விதப் பின்னடைவும் ஏற்படவில்லை. நாம் ரூ.22 லட்சம் கோடிக்கு மதிப்புக்கு கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறோம். இந்தத் தொழில் உள்ளவா்கள் சிலருக்கு இப்போது அச்சம் ஏற்பட்டிருக்கலாம்.

அதே நேரத்தில் எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் உத்தர பிரதேசம், பிகாா் விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக ரூ.45,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் எரிபொருள் இறக்குமதியைச் சாா்ந்திருப்பது சற்று குறைந்துள்ளது. இது ஒரு தரப்பினா் விரும்பாத மாற்றமாக உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு எதிா்கால நலன்களை முன்வைத்து தொடா்ந்து செயல்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

விமான எரிபொருளை வைக்கோலில் இருந்துகூட தயாரிக்க முடியும். எதிா்காலம் என்பது புத்தாக்கத்துக்கும், புதிய ஆய்வுகள், தொழில்நுட்பத்துக்கானவை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments