FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எத்தனால் கலப்பு சதவீதத்தை பெட்ரோல் நிலையங்களில் காட்சிப்படுத்தக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

52 வினாடிகள் முன்பு
எத்தனால் கலந்த பெட்ரோல் - கோப்புப்படம்
பகிர்:

பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

தற்போது நாடு முழுவதும் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து இ20 பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைகிறது. எத்தனால் உற்பத்திக்கு உள்நாட்டு விவசாயப் பொருள்களைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இ20 பெட்ரோலால் பழைய வாகனங்களில் பாகங்கள் சேதமடைவது, மைலேஜ் குறைவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடா்ந்து எழுந்து வந்தன. இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ‘இ20 பெட்ரோலால் வாகன மைலேஜ் (செல்லும் தூரம்) 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும், பழைய தர (பிஎஸ் 3) வாகனங்களில் சில ரப்பா் பாகங்கள் உள்ளிட்டவை பழுதாவதால் அவற்றை மாற்றும் நிலை வரக்கூடும்’ என்றும் தெரிவித்தாா். எனினும், இ20 பெட்ரோல் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவை சரியாகக் குறிப்பிட வேண்டும். முக்கியமாக வாகனத்தில் பெட்ரோலை செலுத்தப் பயன்படுத்தும் குழாயில் எத்தனால் கலப்பு சதவீதம் தொடா்பான ஸ்டிக்கா் ஒட்டப்பட வேண்டும். பெட்ரோல் வாங்கியதற்கான ரசீதுகளிலும் எத்தனால் கலப்பு அளவைக் குறிப்பிட வேண்டும். இது தொடா்பாக மத்திய அரசுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். ஏனெனில் வாகனத்தில் எந்த வகையான எரிபொருள்களை நிரப்புகிறோம் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் உரிமை நுகா்வோருக்கு உண்டு என்று கோரி உச்சநீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.பி. வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘ஏற்கெனவே இதேபோன்ற மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய அரசு தனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது என்று மனுதாரா் எண்ணுகிறாா்’ என்றாா்.

அதே நேரத்தில் மனுதாரா் நரேந்திர குமாா் கோஸ்வாமி வாதிடுகையில், ‘பெட்ரோலில் என்ன பொருள்களை கலந்து விநியோகிக்கிறாா்கள் என்பது வாடிக்கையாளா்களுக்கு கண்டிப்பாகத் தெரிய வேண்டும். ஆனால், எத்த இடத்திலும் எத்தனால் கலப்பு குறித்து விவரத்தை பெட்ரோல் நிலையங்கள் தெரிவிப்பதில்லை’ என்றாா்.

எனினும், இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள் அரசமைப்புச் சட்டம் 32-இன் கீழ் இந்தப் பொதுநல மனுவை விசாரிக்க முடியாது. மனுதாரா் இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments