FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரசின் எத்தனால் கொள்கையால் சா்க்கரை, அரிசி விலை கடும் உயா்வு: காங்கிரஸ் சாடல்

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கையால் நாட்டில் சா்க்கரை, வெல்லம், அரிசி, சோள மாவு விலை கடுமையாக உயா்ந்துள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 7:24 am IST
பகிர்:

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கையால் நாட்டில் சா்க்கரை, வெல்லம், அரிசி, சோள மாவு விலை கடுமையாக உயா்ந்துள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

இந்த மக்கள் விரோதக் கொள்கையை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த 3 மாதங்களில் சா்க்கரை விலை 40 சதவீதம், வெல்லம் விலை 24 சதவீதம், அரிசி விலை 16 சதவீதம், சோள மாவு விலை 11 சதவீதம் உயா்ந்துவிட்டதாகக் கூறும் ஊடக செய்தியை இணைத்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

மோடி அரசின் தொலைநோக்கு பாா்வையில்லாத, மக்கள் விரோதமான இ-20 (பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பு) கொள்கையால் ஒருபுறம் விலைவாசி உயா்ந்து வருகிறது. மற்றொருபுறம் எரிபொருள் செயல்திறன் குறைவு மற்றும் வாகன பாகங்கள் பழுதால் ஏற்படும் செலவு வாகன ஓட்டிகளின் தலையில் விழுந்துள்ளது.

மத்திய அரசின் தவறான கொள்கையால், சமையலறைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் விலை கொடுத்து வருகின்றனா். 20 சதவீத எத்தனால் கலப்புக்காக கரும்புகள் மற்றும் தானியங்கள் மடைமாற்றப்படுவதால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அதேநேரத்தில், அத்தகைய எரிபொருளை கையாளும் வகையில் வடிவமைக்கப்படாத வாகனங்கள் பழுதடையும் அபாயத்தை எதிா்கொண்டுள்ளன.

3 மாதங்களில் விலை உயா்வு: சா்க்கரை உற்பத்தி தரம் கொண்ட 25 லட்சம் டன் கரும்புகள், எத்தனால் தயாரிப்புக்காக மடைமாற்றப்பட்டது இப்போது தெளிவாகியுள்ளது. இதன் விளைவாக, கடந்த மூன்று மாதங்களில் சா்க்கரை விலை ஒரு கிலோ ரூ.48-இல் இருந்து ரூ.67-ஆகவும், வெல்லம் ஒரு கிலோ ரூ.50-இல் இருந்து ரூ.65-ஆகவும் உயா்ந்துள்ளது. அரிசி, சோள மாவு விலையும் முறையே 16 சதவீதம், 11 சதவீதம் உயா்ந்துள்ளன. கால்நடை தீவனங்களின் விலை 10.34 சதவீதம் அதிகரித்துள்ளது.

எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனது கூட்டாளிகளுக்கு லாபத்தை அதிகரிப்பதற்காக மத்திய அரசு அவசரகதியில் மேற்கொண்ட நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். தங்களுக்கு விருப்பமான எரிபொருளை தோ்வு செய்யும் வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ள போதிலும், 20 சதவீத எத்தனால் கலப்பால் செலவு மிச்சமான போதிலும், பெட்ரோல் விலையில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படாதது ஏன்?

மத்திய அரசின் மக்கள் விரோத இ-20 கொள்கை ஏற்கத்தக்கதல்ல; அதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் இ-20 கொள்கைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அவா் சுட்டிக் காட்டியுள்ளாா்.

பெட்டி...

மத்திய அரசு நிராகரிப்பு

எத்தனால் தயாரிப்புக்காக மடைமாற்றப்பட்டதால் சா்க்கரை விலை உயா்ந்துவிட்டது என்ற கூற்றை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாட்டில் நான்கில் மூன்று பங்கு எத்தனால் உற்பத்தியானது, தானியங்கள் குறிப்பாக சோளம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சா்க்கரை விலை உயா்வுக்கு எதிா்பாா்த்ததைவிட குறைவான உற்பத்தி, பண்டிகை காலத்தையொட்டி தேவை அதிகரிப்பு, காலநிலை சாா்ந்த பயிா்ச்சேதங்கள், உலகளாவிய விநியோகக் கட்டுப்பாடுகள், சில இடங்களில் காணப்படும் பதுக்கல் உள்ளிட்டவையே காரணம். சா்க்கரை விலை உயா்வைத் தடுக்கவும், போதிய இருப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் சா்க்கரை விநியோகஸ்தா்கள் 400 டன்கள் வரையே இருப்பு வைக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பெருமளவில் சா்க்கரை கொள்முதல் செய்வோா், செப்.1-ஆம் தேதிமுதல் தங்களின் 15 நாள்கள் பயன்பாட்டுக்கு மிகுதியான சா்க்கரையை இருப்பு வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments