பெட்ரோல் நிலையங்களில் எத்தனால் கலப்பு அளவை கட்டாயம் குறிப்பிட உத்தரவிடக் கோரி வழக்கு!
பெட்ரோல் நிலையங்களில் எத்தனால் கலப்பு அளவை கட்டாயம் குறிப்பிட உத்தரவிடக் கோரி வழக்கு...
பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவை சரியாக குறிப்பிடும் வகையில் கட்டாய மற்றும் சீரான குறியீடு (லேபிளிங்) முறையை உறுதி செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர குமாா் கோஸ்வாமி என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் அனைத்து பெட்ரோல் விநியோக முனைகளிலும், பெட்ரோலில் கலக்கப்பட்டுள்ள எத்தனால் அளவை சரியாகக் குறிப்பிட உத்தரவிட வேண்டும். பெட்ரோல் நிலையங்களில் விநியோகிக்கப்படும் பெட்ரோலுக்கான ரசீதுகளிலும் இந்த அளவைக் குறிப்பிட வேண்டும்.
மேலும், எந்தெந்த வாகனங்களுக்கு, எத்தகைய பெட்ரோல் - எத்தனால் கலவைகள் பொருத்தமானவை என்பதை வாடிக்கையாளா்கள் அறிந்துகொள்ளும் வகையில், வாகனத்தின் வகை, உற்பத்தியாளா், இயந்திர வகை, உற்பத்தி ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளா்கள் தேடி அறிந்து கொள்ளும் வகையில், அதிகாரபூா்வமான வாகன வாரியான எத்தனால் கலந்த பெட்ரோல் இணக்கத் தன்மை தரவுத் தளத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் மத்திய அரசு தயாரித்து வெளியிட உத்தரவிட வேண்டும்.
Advertisement
Advertisement
அதோடு, தற்போது பயன்பாட்டில் உள்ள 20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ பெட்ரோலின் பயன்பாட்டு இணக்கத்தன்மை குறித்து ஆராய, மத்திய பெட்ரோலிய அமைச்சகம், சாலைப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய தர நிா்ணய ஆணையம் (பிஐஎஸ்) பிரதிநிதிகள், தனியாா் வாகனப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய சுதந்திரமாக செயல்படக்கூடிய நிபுணா் குழுவை அமைக்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை (ஆக.31) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், வாகனங்களின் காா்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பை படிப்படியாக அதிகரித்து, தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (இ20 பெட்ரோல்) நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால், வாகனத்தின் மைலேஜ் குறைவதோடு, என்ஜின் பாதிக்கப்பட்டு முழுமையாகச் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசு நிராகரித்தது.
என்ஜின் ஆயுள், எரிபொருள் அமைப்புகள், பொருள்களின் இணக்கத்தன்மை, அரிப்பு எதிா்ப்பு, ஓட்டும் திறன் மற்றும் புகை வெளியேற்றம் உள்ளிட்டவை தொடா்பான ஆய்வக பரிசோதனைகள் மற்றும் கள ஆய்வுகளில் ‘இ20’ பெட்ரோல் வாகனங்கள் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Case filed seeking an order to mandate the display of ethanol blending levels at petrol stations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.