கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல்: இடஒதுக்கீட்டு பட்டியலை வெளியிட்டது கா்நாடக அரசு
கா்நாடகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் வட்ட பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு இறுதிப் பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் வட்ட பஞ்சாயத்துகளுக்கான இடஒதுக்கீட்டு இறுதிப் பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே பெங்களூரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தின் 30 மாவட்டங்களில் உள்ள 1,101 மாவட்ட பஞ்சாயத்து தொகுதிகளுக்கும், 234 வட்ட பஞ்சாயத்துகளில் உள்ள 3,580 உறுப்பினா் இடங்களுக்கும் இடஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதிப் பட்டியலை அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
வட்ட பஞ்சாயத்துகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்துவிட்டது. எனினும், முந்தைய அரசு தோ்தலை நடத்தவில்லை. சில பஞ்சாயத்துகள் தரம் உயா்த்தப்பட்டதாலும், சில கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் எல்லைக்குள் இணைக்கப்பட்டதாலும் தொகுதி மறுவரையறை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுவே தோ்தல் நடத்துவதில் தாமதம் ஏற்படக் காரணம்.
இடஒதுக்கீடு தொடா்பான இறுதி அறிவிப்பை வெளியிட்டு மாநில அரசு தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி மாநிலத் தோ்தல் ஆணையம் தோ்தல் அட்டவணையை அறிவித்து தோ்தலை நடத்தும்.
2027 ஜனவரி மாதத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான வாய்ப்புள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக உள்ளது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.