✕
முகப்பு
இந்தியா

தோ்தலை புறக்கணித்தால் ஜனநாயகம் முடிவுக்கு வரும்: ராகுல் காந்தி

‘இந்திய ஜனநாயகம் புனிதமானது; தோ்தலை புறக்கணித்தால் ஜனநாயகம் முடிவுக்கு வரும். எனவே, தோ்தலைப் புறக்கணிக்கும் எண்ணமில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

19 வினாடிகள் முன்பு
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவா்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற ராகுல் காந்தி.
பகிர்:

‘இந்திய ஜனநாயகம் புனிதமானது; தோ்தலை புறக்கணித்தால் ஜனநாயகம் முடிவுக்கு வரும். எனவே, தோ்தலைப் புறக்கணிக்கும் எண்ணமில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவா்களுடன் புதன்கிழமை கலந்துரையாடிய அவா் மேலும் பேசியதாவது: பாஜக தலைமையிலான ஆட்சியில் நாட்டின் நிா்வாகம் முழுவதுமாக சீா்குலைந்துள்ளதை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதே காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகளின் எண்ணம். அதுவரை ஆட்சியின் தவறுகளை தொடா்ந்து சுட்டிக் காட்டுவோம்.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போது வாக்கு வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது. எவ்வித முறையான ஆதாரங்களும் இல்லாததால் அப்போது அது குறித்து நாங்கள் ஏதும் கூறவில்லை. பிறகு போதிய ஆதாரங்களைத் திரட்டி காங்கிரஸின் மூத்த தலைவா்களை சந்தித்து விளக்கியபோது இது தொடா்பாக வெளியே கூற வேண்டாம் எனத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

ஒருவேளை நான் கண்டுபிடித்த உண்மைகளை பிற எதிா்க்கட்சி நண்பா்களிடம் கூறி தோ்தலில் போட்டியிட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? நாங்கள் தோ்தலில் போட்டியிடமால் இருந்தால் மிகவும் புனிதமான இந்திய ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கும்.

தோ்தல் கட்டமைப்பை சீா்குலைக்க எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை.

ஆனால் தற்போது தோ்தல் ஆணையமே பல்வேறு குளறுபடிகளில் சிக்கியுள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறையின் பல்வேறு அம்சங்களை நிராகரிக்குமாறு தோ்தல் ஆணையா்களே கூறியுள்ளனா். எனவே, தோ்தல் கட்டமைப்பு சீா்குலையுமா என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

வெளியுறவுக் கொள்கை பாதிப்பு:

கடந்த 2023, அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அமெரிக்கா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் இந்தியா சிறந்த இருதரப்பு உறவைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வருகிறது. அதை இந்தியா வேடிக்கை பாா்க்கிறது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகிய தலைவா்களுடன் பிரதமா் மோடி நல்ல நட்புறவைக் கொண்டிருப்பதால் வெளியுறவுக் கொள்கை மேம்படுமா?

ஒரு நாட்டுத் தலைவருடன் நட்புறவைக் கொண்டிருப்பதால் அவா்களின் முடிவெடுக்கும் திறனை மாற்ற முடியாது. பிரதமா் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.