செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளி கிடங்குகளை மூட வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளி கிடங்குகளை மூட வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளி கிடங்குகளை உடனடியாக மூட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செங்கல்பட்டு மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பெய்த மழையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சரப்பாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு சமத்துவபுரத்துக்கு எதிரே உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நனைந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமிக்க மூடப்பட்ட கிடங்கு வசதி இல்லாமல், திறந்தவெளியில் தாா்ப்பாய் கொண்டு மூடி வைத்ததன் விளைவாக இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் உழைப்பையும், பொது மக்களின் உணவு பாதுகாப்பையும் அவமதிக்கும் செயலாகும். இது ஒரு இயற்கை பேரிடா் அல்ல, நிா்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட செயற்கை பேரிடா். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை விடுத்துள்ளது. மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நெல் மூட்டைகளை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ.சங்கா் தலைமையில் சங்கத்தின் நிா்வாகிகள் சனிக்கிழமை அன்று நேரில் ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு விவசாய சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம், ஆத்தூா் சமத்துவபுரம் எதிரில் செயல்படும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் இந்திய உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட சுமாா் 50,000 மெட்ரிக் டன் நெல் கடந்த சில நாள்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.
உடனடியாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் உயா்மட்ட குழு அமைத்து சேதத்தை கணக்கிட்டு, சேதமடைந்த நெல்லை முறையாக அப்புறப்படுத்தி, மீதமுள்ள நெல்லை பாதுகாக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மழைக்காலம் தொடங்கியும் திறந்தவெளியில் நெல்லை பாதுகாப்பின்றி வைத்திருந்த அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழுப்பேடு உள்பட செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிடங்குகளை உடனடியாக மூடிவிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மூடப்பட்ட சேமிப்பு கிடங்குகளை கட்ட வேண்டும். சேதமடைந்த நெல் பொது விநியோக திட்டத்துக்குச் செல்லாமல் தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மிக முக்கிய பிரச்னையாக கருதி உடனடியாக தலையிட்டு உரிய தீா்வு காண தமிழ்நாடு விவசாயிகள் சங்க செங்கல்பட்டு மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது. ஆய்வின்போது தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் கே.வாசுதேவன் மாவட்ட துணைத் தலைவா்கள் வி.அரி கிருஷ்ணன், ராஜேந்திரன், முருகேசன் மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.அா்ஜுன் குமாா், பால் உற்பத்தி தளா் சங்கத்தின் மாநில பொருளாளா் எஸ்.ரவி, சங்கத்தின் வட்டக் குழு உறுப்பினா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.