புறநகர் நகராட்சிகளில் குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் நடவடிக்கை:நகராட்சி இயக்குநர் தகவல்
சென்னை புறநகர் நகராட்சிப் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மண்டல நகராட்சி இயக்குநர் என்.எஸ்.பிரேமா கூறினார்.
சென்னை புறநகர் நகராட்சிப் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மண்டல நகராட்சி இயக்குநர் என்.எஸ்.பிரேமா கூறினார்.
சென்னையை அடுத்த பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த 3 நகராட்சிகளுக்குக் குடிநீர் வழங்கி வரும் சென்னை பெரு நகர குடிநீர் வாரியம், மூன்று நகராட்சிகளின் தினசரி குடிநீர்த் தேவையில் மூன்றில் ஒரு பங்கு குடிநீரை வழங்கி வருகிறது.
Advertisement
Advertisement
தற்போது இந்த நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கிணறுகளும் வறண்டு விட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீரைத்தான் குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கு எதிர்நோக்கும் நிலை உள்ளது.
பாலாற்றில் இருந்து கணிசமான அளவில் குடிநீர் பெறும் திறனை ஆண்டுதோறும் தேவைக்கேற்ப மேம்படுத்திக் கொண்ட தாம்பரம் நகராட்சி மட்டும் சென்னை பெருநகர குடிநீரை எதிர்பார்க்காமல், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையைச் சமாளித்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் குடிப்பதற்கும்,சமைப்பதற்கும் குடிநீர் கேன் தண்ணீரையும், வீட்டு உபயோகத்திற்கு லாரிகள் மூலம் பெறப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இன்னும் 20 நாள்களில் போதிய மழை பெய்யத் தவறினால், இந்தப் பகுதிகளில் கிணறு,ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைக்காமல் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அடித்தட்டு,நடுத்தர மக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படும்.
போர்க்கால நடவடிக்கை: பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க அதிகாரிகளுடன் ஆய்வு நடைபெற்று வருகிறது என்று மண்டல நகராட்சி இயக்குநர் என்.எஸ்.பிரேமா தெரிவித்தார். புறநகர்ப் பகுதிகளில் உள்ள
ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரச்னை தீவிரம் அடைந்தால், அருகில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.