பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தடுப்புச் சுவர் அகற்றம்
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சென்னை கடற்கரை -தாம்பரம் வழித்தடத்தில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள சிமென்ட் தடுப்புச் சுவர்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சென்னை கடற்கரை -தாம்பரம் வழித்தடத்தில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள சிமென்ட் தடுப்புச் சுவர்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இதில், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் 5 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் திங்கள்கிழமை அகற்றப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர் நோக்கி கடந்த மாதம் 24 -ஆம் தேதி காலை சென்ற மின்சார ரயிலில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தவர்களில் 4 பேர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள சிமென்ட் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் கடந்த மாதம் 26 -ஆம் தேதி இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து, சென்னை கடற்கரை -தாம்பரம் வரை சென்னை ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், 5 இடங்களில் தடுப்புச் சுவரையொட்டி தண்டவாளம் இருப்பதை கண்டறிந்தனர். அந்த இடங்களில் உள்ள தடுப்புச் சுவர்களால் பயணிகளுக்கு பாதிப்பு வருமா, அதை அகற்றினால் ஏதாவது விபத்துக்கு வழிவகுக்குமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிவில், சில இடங்களில் உள்ள தடுப்புச் சுவர்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். முதல்கட்டமாக, மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஒட்டி இருந்த தடுப்புச் சுவர் சமீபத்தில் அகற்றப்பட்டது.
பழவந்தாங்கலில்: இந்நிலையில், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் உள்ள சிமென்ட் தடுப்புச் சுவர் திங்கள்கிழமை அகற்றப்பட்டது. பழவந்தாங்கலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வழித்தடத்தின் இடதுபுறத்தில் சாலைக்கும் 4 -ஆவது பாதைக்கும் இடையே இருந்த 5 அடி உயரமும், 20 மீட்டர் நீளமும் கொண்ட சிமென்ட் அத்தடுப்புச் சுவர் அகற்றப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
மீனம்பாக்கம், பழவந்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை ஒட்டி இருந்த தடுப்புச் சுவர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல் சைதாப்பேட்டை, குரோம்பேட்டை ரயில் நிலைங்களில் தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் தடுப்புச் சுவர்களை அகற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச் சுவரை அகற்றுவது தொடர்பாக, தென் மண்டல பாதுகாப்பு ஆணையரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அவர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.