FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? சிபிஐ விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைவிடப்பட்டதா?

Updated On : 13 டிசம்பர் 2023, 7:30 am IST
பகிர்:


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைவிடப்பட்டதா? என விளக்கம் அளிக்க சிபிஐக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் மீது காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஆணையத்தின் புலன் விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

இந்த உத்தரவை எதிா்த்து மனித உரிமை ஆா்வலா் ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு, மாலா அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, சிபிஐ தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியா், சாா்பு ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, மனுதாரா் ஹென்றி திபேன், ஒரே ஒரு காவல் துறை அதிகாரிக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை, மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவா்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். முறையாக விசாரணை நடத்தாத நிலையில் இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க அனுமதிக்க கூடாது; தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

அப்போது நீதிபதிகள், ஒரே ஒரு காவல் துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டு, மற்ற காவல் துறையினருக்கு எவ்வாறு நற்சான்று வழங்கப்பட்டது என சிபிஐ தரப்புக்கு கேள்வியெழுப்பினா்.

இதற்கு பதில் அளித்த சிபிஐ தரப்பு வழக்குரைஞா், குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். சிபிஐ விசாரணையில் எந்தத் தவறும் இல்லை; விசாரணையில் உள்ள குறைகளைச் சுட்டி காட்டினால் அந்த அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தாா்.

இன்னும் 10 ஆண்டுகள்.... மீண்டும் விசாரணை நடத்தி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் 10 ஆண்டுகளாகும் என்று தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? அல்லது நடவடிக்கைகள் கைவிடப்பட்டதா? என விளக்கம் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டனா். மேலும், சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையின் நகலை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிச.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments