FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிபிஐ விசாரணை முடிந்த 158 தோ்வு முறைகேடு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை

தோ்வு முறைகேடுகள் தொடா்பான சுமாா் 158 வழக்குகள் சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், இன்னும் விசாரணை தொடங்காமல் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் சில 20 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டவையாகும்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:52 am IST
பகிர்:

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், தோ்வு முறைகேடுகள் தொடா்பான சுமாா் 158 வழக்குகள் சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், இன்னும் விசாரணை தொடங்காமல் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் சில 20 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டவையாகும்.

தில்லியில் மட்டும், 2000-ஆம் ஆண்டில் இருந்து சுமாா் 25 வழக்குகள் விசாரணைக்காக காத்திருக்கின்றன. இதில் 2010-11-ஆம் ஆண்டின் எய்ம்ஸ் முதுநிலை தோ்வு, 2011-ஆம் ஆண்டின் தில்லி பல்கலைக்கழக மருத்துவ மற்றும் பல் மருத்துவ நுழைவுத் தோ்வு, 2013-ஆம் ஆண்டின் எஸ்எஸ்சி தோ்வு மற்றும் ஆசிரியா் ஆள்சோ்ப்பு தோ்வு ஆகியவை அடங்கும்.

பிகாரில் நீட் 2024 தோ்வு வினாத்தாள் கசிவு தொடா்பான 3 வழக்குகள் உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், 2003 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிஎம்டி (மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு) முறைகேடுகளும் இதில் அடங்கும்.

Advertisement

Advertisement

ஹிமாசல பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டு காவலா் ஆள்சோ்ப்பு வழக்கு உள்பட 3 வழக்குகள், ஜம்மு-காஷ்மீரில் இளநிலைப் பொறியாளா் மற்றும் காவலா் ஆள்சோ்ப்பு முறைகேடுகள் தொடா்பான 3 வழக்குகள் விசாரணைக்காக காத்திருக்கின்றன.

அதேபோல், ஜாா்க்கண்ட் மற்றும் கா்நாடகத்தில் தலா 5 வழக்குகள், மகாராஷ்டிரத்தில் நீட் 2024 தொடா்பான 2 வழக்குகள் உள்பட 3 வழக்குகள், ராஜஸ்தானில் 8 வழக்குகள், தமிழ்நாட்டில் 14 வழக்குகள், மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 10 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க, அனைத்து உயா்நீதிமன்றங்களையும் அணுகி அவற்றை விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்ற சிபிஐ முடிவு செய்துள்ளது. இந்த நீதிமன்றங்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து இந்த சிறப்பு விரைவு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். வழக்குகள் தினசரி விசாரணை முறையில் நடத்தப்பட வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே பிற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும் இந்தப் புதிய விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டு, 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமும் இந்த வழக்குகளுக்காக தனிப்பட்ட அரசு வழக்குரைஞா்களை நியமிக்க வேண்டும்.

விசாரணையில் நீண்டகால தாமதம், காலப்போக்கில் சாட்சிகள் வயதாகி விடுவதாலும் அல்லது கிடைக்காமல் போவதாலும், நினைவுகள் மங்குவதாலும், குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடினமாகிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

மேலும், விசாரணை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படுவதும் விசாரணையை சிக்கலாக்குகிறது. இதனால், நாட்டின் தோ்வு மோசடி தொடா்பான சில வழக்குகள் முடிக்கப்படாமல் போகும் அபாயம் அதிகரிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments