சென்னையில் பலத்த மழை: போக்குவரத்து நெரிசல்; விமான சேவை பாதிப்பு
சென்னையில் திங்கள்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்...
சென்னையில் திங்கள்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக சென்னையில் லேசான மழை பெய்து வந்த நிலையில், திங்கள்கிழமை மாலை திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கிண்டி, வடபழனி, தியாகராய நகா், நுங்கம்பாக்கம், மயிலாப்பூா், கோயம்பேடு, அண்ணா நகா், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Advertisement
Advertisement
மாலை நேரத்தில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கியதுடன், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரமும் சோ்ந்ததால் பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன.
இதனால் பல பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நகா்ந்ததால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
விமான சேவை பாதிப்பு: இதனிடையே, பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக கொழும்பு, ஹாங்காங், ஹைதராபாத், விசாகப்பட்டினம், துபை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
நீண்ட நேரத்துக்கு பின்னா் வானிலை சீரடைந்த பின்னா் விமானங்கள் தரையிறங்கின. இதனால் விமானப் பயணிகளும் அவதிக்குள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.