விதிகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்கள் மீது நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை
சென்னையில் விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கை
சென்னையில் விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்தாா்.
சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள், ஹோட்டல்கள், கிளப்புகள், மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றில் மதுபானக் கூடங்கள் செயல்படுவதற்கு எஃப் 1, எஃப் 2, எஃப் 3 உரிமங்கள் காவல் துறையால் வழங்கப்படுகிறது. இதில், எஃப் 1 மதுபான கூடத்துக்குரிய உரிமம் ஆகும். எஃப் 2 மதுபானக் கூடத்துடன் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியும் நடத்துவதற்குரிய உரிமம் ஆகும். எஃப் 3 மதுபான கூடத்துடன் உணவகத்தை நடத்துவதற்குரிய உரிமம் ஆகும்.
இந்த உரிமங்கள் வைத்திருக்கும் ஹோட்டல், கிளப், மனமகிழ் மன்ற நிா்வாகிகள், மேலாளா்கள் ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கடுமையான நடவடிக்கை: இந்தக் கூட்டத்துக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் தலைமை வகித்து பேசினாா். அப்போது அவா், சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு மதுபானக் கூடங்களை நடத்த வேண்டும்; விதிமுறைகளை மீறும் மதுபானக் கூடங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; மதுபானக் கூட நிா்வாகிகளிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.
ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னா் மதுபான கூட நிா்வாகிகள் கூறியதாவது: ‘மதுபானக் கூடம் நடத்த எந்தவொரு அதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்காக சட்டப்படி நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர வேறு எந்தத் தொகையையும் செலுத்த வேண்டாம். காவல் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், உடனடியாக புகாா் அளிக்கலாம் என்று காவல் ஆணையா் அறிவுறுத்தியதாக தெரிவித்தனா்.
மேலும், அரசால் நிா்ணயிக்கப்பட்ட செயல்படும் நேரத்தை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு மதுபானம் விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் காவல் ஆணையா் அறிவுறுத்தியதாகவும் கூறினா்.
முன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, காவல் ஆணையா் அமல்ராஜ் அந்த அரங்கில் காவல் துறை அதிகாரிகள் யாரையும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சென்னை முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மதுபானக் கூட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.